
“முதல் படம் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். இரண்டாவது படம் பைசாவை கொள்ளை அடித்ததால் சாய்ந்த கோபுரம்” என்ற கேப்ஷனுடன் சாய்ந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. மேலும், திராவிட மாடல் அரசால் கட்டப்பட்ட இந்த தொட்டி தமிழ்நாட்டின் அதிசயம் என்றும் குறிப்பிட்டு இப்புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இப்புகைப்படத்தில் இருக்கும் சாய்ந்த குடிநீர் தொட்டி தெலங்கானாவில் இருப்பது தெரியவந்தது.
வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் குடிநீர் தொட்டி தமிழ்நாட்டில் தான் உள்ளதா என்பதை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2020ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி New Indian Express ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் வைரலாகும் அதே புகைப்படம் இடம்பெற்றுள்ளது.அதில், “பகீரதா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழாவிற்கு முன்பாகவே சாய்ந்துள்ளதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில், The News Minute ஊடகத்தில் 2020ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தெலுங்கானாவின் திண்டிசிந்தபள்ளி என்ற கிராமத்தில் பகீரதா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 30 டிகிரி வரை சாய்ந்துள்ளது.
ரூபாய் 15 லட்ச செலவில் கட்டப்பட்டுள்ள இத்தொட்டியின் அடிக் கட்டுமானம் பலவீனமான மண்ணில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வாறு சாய்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பகீரதா திட்டத்தின் நிர்வாகப் பொறியாளர் ஸ்ரீதர் ராவ் இதுகுறித்து கூறுகையில், இந்த நீர்த்தேக்கத் தொட்டி உறுதியாக இருப்பதாகவும், இதனால் பொது மக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, சாய்ந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது என்றும் தமிழ்நாட்டில் இல்லை என்றும் தெரியவருகிறது.