
கடந்த ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பேரை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 241 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று (ஜூன் 13) விபத்துப் பகுதிக்கு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஒரே நாளில் நான்கு உடைகளை பிரதமர் நரேந்திர மோடி மாற்றிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படங்கள் வெவ்வேறு நிகழ்வுகளுடன் தொடர்புடையது என்று தெரியவந்தது.
விபத்துப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி வெவ்வேறு உடைகளை மாற்றிக்கொண்டாரா என்பது குறித்து கண்டறிய பிரதமரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஆய்வு செய்தோம். அப்போது, அவர் விபத்து பகுதியில் மேற்கொண்ட ஆய்வு மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்த இரு காணொலிகளும் வெளியிடப்பட்டிருந்தன.
அதனை ஆய்வு செய்ததில், இரண்டிலும் பிரதமர் மோடி வெள்ளை நிற அங்கியுடன் கருப்பு நிற பார்டர் கொண்ட ஒரு சால்வை அணிந்து இருந்தார் என்பதை அறியமுடிகின்றது. தொடர்ந்து, பைரலாகும் புகைப்படத்தை ஒவ்வொன்றாக ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம்.
அப்போது, பிங்க் நிற உடையுடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்துடன் 2022ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி The Print செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, குஜராத் மாநிலம் மோர்பியில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான பாலத்தை பார்வையிட வந்து போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.
மேலும், கருப்பு நிற உடை அணிந்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்துடன் 2023ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி News 18 ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியின் படி, ஒடிசா மாநிலம் பாலாசோரில் ஏற்பட்ட ரயில் விபத்து பகுதியில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக மோர்பி பால விபத்து மற்றும் ஒடிசா ரயில் விபத்து ஆகிய நிகழ்வுகளின் போது பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்ட புகைப்படத்தை அகமதாபாத் விமான விபத்து பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது ஒரே நாளில் நான்கு உடைகளை பிரதமர் மோடி மாற்றிக் கொண்டதாக திரித்து தவறாக பரப்பி வருகின்றனர் என்று தெரிய வந்தது.