நேபாளத்தில் இருந்து ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்படும் திருமண சீர்வரிசையின் காணொலி; உண்மை என்ன?

நேபாளத்தில் இருந்து ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக 1,100 பெட்டிகளில் திருமண சீர்வரிசைப் பொருட்கள் அயோத்திக்கு வருவதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
நேபாளத்தில் இருந்து ராமர் கோயிலுக்கு வரும் திருமண சீர்வரிசைகள் என்று வைரலாகும் காணொலி
நேபாளத்தில் இருந்து ராமர் கோயிலுக்கு வரும் திருமண சீர்வரிசைகள் என்று வைரலாகும் காணொலி

“சீதா பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் சீர்வரிசை வருகை: அயோத்யா ஶ்ரீ ராம் ஜன்ம பூமிக்கு சீதாதேவி பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் திருமண சீர்வரிசைப் பொருட்கள் வந்துள்ளன. பெட்டிகளில் ஏராளமான தங்க & வெள்ளி நகைகள், உயர்தரமான ஆடைகள், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள், உலர் பழங்கள் மற்றும் அரிசி ஆகியவை நேபாளத்தில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

நேபாளத்தில் பாயும் 16 நதிகளிலிருந்து புனித நீரும் அனுப்பி வைத்துள்ளனர். அவைகள் அயோத்யாவை வந்தடைந்துள்ளன…” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் சீர்வரிசை வந்துள்ளதாக இத்தகவலை பரப்பி வருகின்றனர்.

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இது ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக தயாரிக்கப்பட்ட 108 அடி நீளமுள்ள ஊதுபத்தியை அயோத்திக்கு கொண்டு செல்லும் காணொலி என்பது தெரியவந்தது. முதலில், இக்காணொலியின் உண்மைத்தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, omsai3583 என்ற இன்ஸ்டாகிராம் பயனர் vadadora, agarbatii, ayodhya என்ற வார்த்தைகளை குறிப்பிட்டு தெளிவான காணொலியை பதிவிட்டு இருந்தார்.

அதில், ஒரு பகுதியில் வைரலாகும் காணொலியில் இருப்பது போன்றே இந்தி மொழி பேனர் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதனை கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியுடன் மொழிபெயர்த்துப் பார்த்ததில், “குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து அயோத்திக்கு 108 அடி நீளமுள்ள ஊதுபத்தி கொண்டு செல்லப்படுவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தி மொழி பேனர்கள்
இந்தி மொழி பேனர்கள்

கிடைத்த தகவலின் அடிப்படையில் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Desh Gujarat, Wionews உள்ளிட்ட ஊடகங்கள் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளன. அதன்படி, “3500 கிலோ எடையுடன் 108 அடி நீளமும், 3.5 அடி அகலமும் கொண்ட இந்த ஊதுபத்தியை வதோதராவைச் சேர்ந்த விஹாபாய் பர்வாத் என்பவர் தயாரித்துள்ளார். நீள ட்ரக் உதவியுடன் வதோதராவில் இருந்து அயோத்தி வரை சுமார் 1800 கிலோமீட்டர்கள் பயணித்து யாத்திரையாக எடுத்துச் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”.

மேலும், உண்மையில் நேபாளத்தில் இருந்து அது போன்ற பரிசுப்பொருட்கள் வருகின்றனவா என்பது குறித்து தேடுகையில், Times of India இது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ராமரின் மனைவி சீதா பிறந்த இடமான நேபாளத்தின் ஜனக்பூரில் இருந்த ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக 3000 காணிக்கைகள் வந்துள்ளன. 500 பக்தர்கள் கொண்டு வந்த காணிக்கைகளில் பணம், ஆடைகள், பழங்கள், தங்கம், வெள்ளி மற்றும் இனிப்புகள் அடங்கும். ஜனக்பூர் தாம் ராம் ஜானகி கோயில் மற்றும் அயோத்தியை தங்களுடைய சகோதர நகரமாகக் கருதும் நேபாளத்தைச் சேர்ந்த நபர்கள் இக்காணிக்கைகளை அனுப்பியுள்ளனர். இவை அனைத்தும் அயோத்தியில் நடைபெறும் சிறப்பு கண்காட்சியில் வைக்கப்படும், தொடர்ந்து, ராமர் கோயிலுக்கு வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக, நேபாளத்தில் இருந்து ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக 1,100 பெட்டிகளில் திருமண சீர்வரிசைப் பொருட்கள் வந்துள்ளன என்று வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அது வதோதராவில் தயாரிக்கப்பட்ட 108 அடி நீளமுள்ள ஊதுபத்தியை அயோத்திக்கு கொண்டு செல்லும் காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், நேபாளத்தில் இருந்து 3000 காணிக்கைகள் வந்தது உண்மை என்ற தகவலும் நமக்கு கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in