

இங்கிலாந்தில் ஹலால் (Halal) உணவுகளைத் தவிர வேறு எந்த உணவுகளையும் விற்கக் கூடாது என இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்குள்ள மக்கள் பெரிய அளவிலான பன்றி இறைச்சியை (Pork meat) ஊர்வலமாக எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. குறிப்பாக, எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில் இந்த காணொலி பகிரப்பட்டு, இங்கிலாந்தில் மத ரீதியான மோதல் போக்கு நிலவுவது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி 'லார்ட் மேயர் ஷோ' (Lord Mayor’s Show) அணிவகுப்பின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் இந்தத் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் திரிக்கப்பட்டது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உண்மையில், அந்த காணொலிவில் காணப்படுவது பன்றி இறைச்சி அல்ல, அது ஒரு பிரம்மாண்டமான மாட்டிறைச்சி (Giant rib of beef) வடிவிலான காற்று அடைக்கப்பட்ட பலூன் ஆகும். மேலும், இது எந்தவொரு போராட்டமும் கிடையாது.
இங்கிலாந்தின் இறைச்சித் தொழில் சார்ந்த செய்திகளை வெளியிடும் அதிகாரப்பூர்வ இணையதளமான மீட் மேனேஜ்மென்ட் (Meat Management) ஊடகத்தில், 2026 நவம்பர் 16 அன்று வெளியான செய்தியின்படி, இது லண்டனில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடைபெறும் 'லார்ட் மேயர் ஷோ' (Lord Mayor’s Show) அணிவகுப்பாகும். 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து லண்டன் நகரத்திற்கு எனத் தனியாக மேயரை நியமிக்கும் உரிமை வழங்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
2026 நவம்பர் 14-ஆம் தேதி சனிக்கிழமையன்று லண்டனில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், 'வொர்ஷிப்ஃபுல் கம்பெனி ஆஃப் புட்சர்ஸ்' (Worshipful Company of Butchers - WCB) அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். லிவரிமேன் ஜூலியன் பர்ஸ்க்ளோவ் (Julian Pursglove) என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஊர்தியில், WCB அமைப்பினர் மற்றும் அவர்களது தொண்டு நிறுவன கூட்டாளியான ஷாலோஃபோர்ட் பண்ணையின் (Shallowford Farm) பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த ஊர்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிரம்மாண்டமான மாட்டிறைச்சி விலா எலும்பு (Giant inflatable rib of beef) வடிவத்திற்கு கிரெஸ்ஸிங்ஹாம் ஃபுட்ஸ் (Gressingham Foods) நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.
இதே அணிவகுப்பில், 'வொர்ஷிப்ஃபுல் கம்பெனி ஆஃப் ஃபார்மர்ஸ்' (Worshipful Company of Farmers) அமைப்பினரும் பிரிட்டிஷ் விவசாயத்தை ஆதரிக்கும் விதமாக டிராக்டர் மற்றும் கேரட் அறுவடை இயந்திரங்களுடன் பங்கேற்றனர். பிரிட்டிஷ் உணவு உற்பத்தி மற்றும் விவசாயிகளின் பங்களிப்பைக் கொண்டாடும் இந்த நிகழ்விற்கு தேசிய விவசாயிகள் சங்கம் (NFU) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவளித்தன.
இது குறித்த காணொலியை பல்வேறு இன்ஸ்டாகிராம் ( பதிவு 1, பதிவு 2, பதிவு 3 ) பக்கங்களும் படிவிட்டுள்ளன.
லண்டனில் 2026 நவம்பர் 14 அன்று நடைபெற்ற பாரம்பரிய 'லார்ட் மேயர் ஷோ' அணிவகுப்பில், இறைச்சி வணிகர்கள் சங்கத்தினர் மாட்டிறைச்சி வடிவிலான பலூனைக் காட்சிப்படுத்திய காணொலிவை, ஹலால் உணவுக்கு எதிராகப் பன்றி இறைச்சியுடன் நடத்தப்பட்ட போராட்டம் எனத் தவறான நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.