Fact Check: மதுரையில் சைக்கோ கொலையாளி, குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுகின்றனரா?

மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் தகவல்கள் வைரலாகி வருகின்றன
மதுரையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுவதாக வைரலாகும் தகவல்
மதுரையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுவதாக வைரலாகும் தகவல்

சமீப காலமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுவதாக தொடர்ந்து வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன. இவை வதந்தி என்று தமிழ்நாடு காவல்துறையும் அரசும் தொடர்ந்து தெளிவுபடுத்தியும், வதந்திகள் பரப்புபவர்களால் பொதுமக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்படுகிறது. இருப்பினும் வதந்திகள் பரவுவது நின்றபாடில்லை. இந்நிலையில், “மதுரையில் சைக்கோ கொலையாளி ஒருவன் 400 பேரை கடத்தியுள்ளதாகவும், குழந்தைகள் பெற்றோருடன் வெளியே செல்லுமாறும், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை கடத்தியுள்ளதாகவும்” ஒரு நபரின் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதேபோன்று, மதுரையில் உள்ள தனியார் கல்லூரி அருகே ஒருவர் பெண்களை கடத்துவதாகவும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வைரலாகும் தகவல்கள்
வைரலாகும் தகவல்கள்

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல்கள் வதந்தி என்று தெரியவந்தது. முதலில் சைக்கோ கொலையாளி என்று பரவும் நபரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, வேறு மாவட்டங்களில் இதே புகைப்படத்துடன் ஏற்கனவே வதந்தியாக பரவியது தெரியவந்தது. இதில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக இதே நபரின் புகைப்படத்துடன் Mani Kandan என்ற யூடியூப் சேனலில் கடந்த மார்ச் 1ஆம் தேதி காணொலி வெளியிடப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் பெண்கள் கடத்தப்படுவதாக இதே நபரின் புகைப்படத்தை காணொலியாக ARASU MALAR TV என்ற யூடியூப் சேனல் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கிடைத்த தகவலை கொண்டு திண்டுக்கல் மற்றும் சென்னை மாவட்டம் காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் தேடினோம். அப்போது, நேற்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறையும், வைரலாகி வரும் இதே புகைப்படத்துடன் இத்தகவல் வதந்தி என்றும் போலி செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

தொடர்ந்து, மதுரை தனியார் கல்லூரி அருகே பெண்கள் கடத்தப்படுவதாக வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் நபர் குறித்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வைரலாகும் புகைப்படத்துடன் Timesnow செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “பம்மல் மூங்கில் ஏரிப் பகுதியில் குழந்தையைக் கடத்த வந்த நபர் எனத் திருநங்கை ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான காணொலி காட்சிகள் இணையத்தில் பரவி வைரலானது. இந்த சம்பவத்தில் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றும் அந்த திருநங்கை ஐ.டி. ஊழியர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய காணொலியை ஏற்கனவே வேலூரில் இஸ்லாமிய பெண் குழந்தைகள் கடத்தப்படுவதாக கூறி தவறாக பரப்பி வந்ததை சவுச்செக் ஃபேக்ட்செக் செய்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், நேற்று (மார்ச் 5)ஆம் தேதி மதுரை மாவட்ட காவல்துறை பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான காணொளி பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, அது பொதுமக்களிடையே தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மாதிரியான பொய்யான வீண் வதந்திகளை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட காவல்துறையின் பத்திரிகை செய்தி
மதுரை மாவட்ட காவல்துறையின் பத்திரிகை செய்தி

Conclusion:

நம் தேடலின் முடிவாக மதுரை மாவட்டத்தில் சைக்கோ கொலையாளியால் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுவதாக வைரலாகும் புகைப்படம் மற்றும் தகவல்கள் வதந்தி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in