
“புதுச்சேரி குழந்தை ஆர்த்தி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான RSS பாஜகவை சேர்ந்த விவேகானந்தனை கைது செய்யாமல் பாதுகாக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். இது உங்கள் வீட்டு குழந்தைக்கு நடந்தாலும் இப்படித்தான் பாதுகாப்பீர்களா மேடம்?” என்ற தகவலுடன் ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் விவேகானந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இத்தகவலின் உண்மைத் தன்மையைக் கண்டறிய முதலில் அச்சம்பவம் தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Hindustan Times இன்று (மார்ச் 8) செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், “இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு முத்தியால்பேட்டையைச் சேர்ந்த முனுசாமி மகன் கருணாஸ் (19) மற்றும் கோபால் மகன் விவேகானந்தன் (56) ஆகிய இருவரை போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடந்த மார்ச் 6ஆம் தேதி அறிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக புதுச்சேரி காவல்துறையினர் இது தொடர்பாக பத்திரிகை செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதிலும், மேற்கண்ட இருவர் கைது செய்யப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அதில் இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் கைது செய்யப்பட்டவர் தானா என்று உறுதி செய்ய வைரலான புகைப்படத்தில் இருக்கும் வாக்காளர் அடையாள அட்டையின் EPIC எண்ணைக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேடினோம். அப்போது, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த கோபால் மகன் விவேகானந்தன் என்று தகவல் கிடைத்தது. இதன் மூலம் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் விவேகானந்தன் என்பது உறுதியாகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான RSS பாஜகவைச் சேர்ந்த விவேகானந்தனை கைது செய்யாமல் பாதுகாக்கிறார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் என்று வைரலாகும் தகவல் தவறானது. மேலும், இச்சம்பவத்தில் விவேகானந்தன் உள்பட இருவர் கடந்த மார்ச் 6ஆம் தேதியே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.