குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், “பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில்” என்ற கேப்ஷனுடன் டிராக்டர் மற்றும் டிரக்குகளுடன் விவசாயிகள் பலர் நெடுஞ்சாலையில் ஊர்வலமாக செல்லும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி ஸ்பெயின் விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. தொடர்ந்து, இக்காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது. Jaen_Mashiaj என்ற எக்ஸ் பயனர் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி வைரலாகும் காணொலியை பதிவிட்டிருந்தார். அதில், “Lleida விவசாயிகள் பார்சிலோனாவை நோக்கி மெதுவான அணிவகுப்பைத் தொடங்குகின்றனர். 2030ஆம் ஆண்டின் ஐரோப்பிய யூனியனின் சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிராக போராட்டத்தின் இரண்டாவது நாளில் A-7 நெடுஞ்சாலை வழியே லா காண்டலை நோக்கி ஒரு கிலோமீட்டர் நீளமான டிராக்டர்கள் செல்கின்றன” என்று ஸ்பானிஷ் மொழியில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கிடைத்த தகவலின் அடிப்படையில் கூகுளில் கீவர்ட சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, irishexaminer என்ற ஊடகம் இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “ஐரோப்பிய யூனியனின் சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிராக ஸ்பெயின் விவசாயிகள் இரண்டாவது நாளாக டிராக்டர் போராட்டம் நடத்தினர்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், catalannews என்ற ஊடகமும் இதே செய்தியை பிப்ரவரி 6ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
மேலும், காணொலியின் தொடக்கத்தில் உள்ள டிரக்கிள் எழுதப்பட்டிருந்த வாசகம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொழியைப் போன்று இல்லாமல் வேறு ஏதோ ஒரு மொழியில் எழுதப்பட்டு இருந்தது எனவே கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியுடன் அதனை மொழிபெயர்ப்பு செய்து பார்த்தோம். அப்போது, அது Catalan எனப்படும் ஐரோப்பாவில் பேசப்படும் மொழி என்பது தெரியவந்தது. இது ஸ்பெயின் நாட்டிலும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக பஞ்சாபில் இருந்து டெல்லியை நோக்கி புறப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகள் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையில் ஸ்பெயின் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.