

தமிழ்நாட்டில் முதல்முறையாக தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை மற்றும் கழிப்பறை வசதிகள் தவெக ஆட்சியில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று தெரியவந்தது. சென்னையில் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் காக்கும் பொருட்டு, அவர்களுக்கு 300 சதுர அடியில் நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தற்போதைய சமூக வலைதளச் செய்திகளை ஆராய்ந்ததில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்த தினமணி நாளிதழில் நவம்பர் 15, 2025 அன்று வெளியான சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறைகள்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு என்ற செய்தியும், தினத்தந்தி நாளிதழில் டிசம்பர் 19, 2025 அன்று வெளியான சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறைகள் - தீர்மானம் நிறைவேற்றம் என்ற செய்தியும், ஈடிவி பாரத் ஊடகத்தில் வெளியான சோழிங்கநல்லூர் பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை மற்றும் உணவுக்கூடம் கட்டும் பணி தொடக்கம் என்று வெளியாகியுள்ள செய்திகளின் படி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை துவைக்கி வைத்துள்ளார் என்று தெரியவருகிறது.
கிடைக்கபெற்ற செய்திகளின் படி, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி அன்று, சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கழிப்பறையுடன் கூடிய ஓய்வறைகளை ரூ.25.95 கோடி செலவில் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தெரியவந்தது.
மேலும், இதன் ஒரு பகுதியாக ஓ.எம்.ஆர். சாலை மேட்டுக்குப்பம் பகுதியில் ரூ.73.50 லட்சம் மதிப்பீட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு அருந்தும் அறை மற்றும் ஓய்வறை அமைக்கும் கட்டுமானப் பணிகள் தொடக்க விழாவும் நடைபெற்றதும் தெரியவந்தது.
Conclusion:
மேற்கண்ட அனைத்து ஆதாரங்களும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறை மற்றும் கழிப்பறை வசதி திட்டமானது திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டவை என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே, இத்திட்டம் தவெக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று இதன் மூலம் அறிய முடிகிறது.