“சிங்கார" சென்னை ?! கார் ரேஸுக்கு ரோடு போட நிதி இருக்கு... மக்களுக்கு ரோடு போட நிதி இல்லையா?” என்ற கேப்ஷனுடன் பள்ளத்துடன் மழைநீர் தேங்கி இருக்கும் சாலையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பாக ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கார் பந்தயம் நடத்துவதற்கு நிதி உள்ளது. ஆனால், சாலை அமைக்க நிதி இல்லையா என்று தமிழ்நாடு அரசை கேள்வி கேட்பது போன்று இப்புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2020ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி Times of India வைரலாகும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “சென்னை திருவொற்றியூர் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் என்று வைரலாகும் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது”.
மேலும், “கடந்த மாதம் வீசிய இரண்டு சூறாவளிகளை அடுத்து நகரில் பெய்த மழையால் வடசென்னையில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக திருவொற்றியூர் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய மாநகராட்சியில் இருந்து டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் ஒரு மாதத்திற்குள் சரிசெய்யப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்புகைப்படம் 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
தொடர்ந்து, இச்சாலை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய இச்சாலையில் அமைந்துள்ள ஒரு கடையான ரங்கா பெயிண்ட்ஸின் தொடர்பு எண்ணை கூகுள் மேப் உதவியுடன் பெற்று அக்கடையினை தொடர்புகொண்டு பேசியது சவுத்செக். அதற்கு, “இப்பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்ற போது சாலை மோசமாக இருந்தது. ஆனால், அதுவும் நாளடைவில் சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது இச்சாலையில் எந்தவித பள்ளமும் இல்லை அனைவரும் எளிதாக பயணம் செய்து வருகின்றனர்” என்று விளக்கம் அளித்தார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக திமுக ஆட்சியில் கார் பந்தயம் நடத்துவதற்கு நிதி உள்ளது ஆனால், சாலை அமைக்க நிதி இல்லையா என்று கூறி வைரலாகும் பள்ளம் நிறைந்த சாலையின் புகைப்படம் 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.