பாஜக ஆட்சி அமைந்தபிறகு மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் சிறுபான்மையின தள்ளுவண்டி வியாபாரிகளின் கடைகளை புல்டோசர் மூலம் உடைத்தெரிவதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 2020ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குஜராத் வருகைக்காக சாலையோர கடைகள் அகற்றப்படுவதாக இதே காணொலி பரவியது தெரியவந்தது. இதன்மூலம் முதற்கட்டமாக காணொலி பழையது என்பது உறுதியாகிறது.
தொடர்ந்து, இச்சம்பவம் எங்கு நடைபெற்றது என்பதை அறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை மீண்டும் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, The News Insight என்ற எக்ஸ் பக்கத்தில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள யூனிட்-1 சந்தைக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் காட்சிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கிடைத்த தகவலின் அடிப்படையில் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, இத்தகவலை உறுதிபடுத்தும் விதமாக Kanak News என்ற யூடியூப் சேனல் “BBSR யூனிட்-1 சந்தை ஆக்கிரமிப்பு வெளியேற்றும் பணி தொடங்கியது, வியாபாரிகளின் எதிர்வினை” என்ற தலைப்பில் வியாபாரிகளின் எதிர்வினை குறித்த காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, வைரலாகும் காணொலியில் உள்ளது போன்றே இதிலும் புல்டோசர் மூலம் சாலையோர கடைகள் அகற்றப்பட்டிருப்பதை நம்மால் காணமுடிகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு அங்குள்ள சிறுபான்மையின தள்ளுவண்டி வியாபாரிகளின் கடைகளை புல்டோசர் மூலம் உடைத்தெரிவதாக வைரலாகும் காணொலி பழையது என்றும் அது ஒடிசாவில் நடைபெற்றது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.