Fact Check: தமிழ்நாட்டில் பாஜகவினர் தாக்கியதில் 6 இஸ்லாமியர்கள் உயிரிழந்ததாகப் பரவும் காணொலி? உண்மை என்ன

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜகவினர் நடத்திய தாக்குதலில் 6 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்
Fact Check: தமிழ்நாட்டில் பாஜகவினர் தாக்கியதில் 6 இஸ்லாமியர்கள் உயிரிழந்ததாகப் பரவும் காணொலி? உண்மை என்ன
fifthestatedigital1
Published on: 
2 min read

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 6 இஸ்லாமியர்கள் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டு ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தக் காணொலியில் காவல்துறையினர் பலரை வாகனத்தில் ஏற்றுவதும், ஒரு பெண் ஊடகங்களிடம் ஆவேசமாகப் பேசுவதும் பதிவாகியுள்ளது. மேலும், ஒருவர் தீச்சட்டியுடன் நடந்து செல்வதும், காவிக் கொடிகளைக் கையில் ஏந்தியிருந்த போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுவதும் அதில் தெரிகிறது.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்று தெரியவந்தது. போராட்டத்தின் பொது இஸ்லாமியர்கள் இறந்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

சமூக வலைதளங்களில் பரவும் இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை அறிய சவுத் செக் குழு ஆய்வை மேற்கொண்டது. முதற்கட்டமாக அந்தக் காணொலியை நுணுக்கமாக ஆய்வு செய்தபோது, அதில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடப்பதைத் தவிர, யார் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதற்கான காட்சிகளோ அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைக்கான அறிகுறிகளோ எதுவும் இல்லை என்பது தெளிவானது.

தொடர்ந்து, மதுரை உள்பட தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலாவது மத ரீதியான வன்முறை அல்லது உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்தனவா என இணையத்தில் தேடினோம். அத்தகைய வன்முறைச் சம்பவங்களோ உயிர்ச் சேதங்களோ ஏற்பட்டதாக எந்தவொரு செய்தி அறிக்கையோ அதிகாரப்பூர்வத் தகவலோ வெளியாகவில்லை. மாறாக, மதுரை திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது குறித்த செய்திகளை மட்டுமே தினமணி, தினகரன், தினமலர் ஆகிய ஊடகங்கள் நவம்பர் 24, 2026 அன்று வெளியிட்டிருந்தன.

வைரலாகும் காணொலியின் உண்மையான பின்னணியைக் கண்டறிய, அதன் முக்கியக் காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். இந்தத் தேடலில், 44 விநாடிகள் கொண்ட அதே காணொலியை தி இந்து ஆங்கில நாளிதழ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் நவம்பர் 24, 2026 அன்று பதிவிட்டிருந்தது கண்டறியப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெளியே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே நிகழ்வு தொடர்பான காணொலியை நியூஸ் தமிழ் செய்தித் தொலைக்காட்சியும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நவம்பர் 24, 2026 அன்று வெளியிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து சென்னையில் தீபம் ஏற்றிப் போராட்டம் நடத்திய பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் காணொலியைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாகப் பொய்யான தகவல் பரப்பப்படுவது உறுதியாகிறது.

Conclusion:

தமிழ்நாட்டில் பாஜகவினர் நடத்திய தாக்குதலில் 6 இஸ்லாமியர்கள் உயிரிழந்ததாகப் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என சவுத் செக் ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. தமிழ்நாட்டில் அத்தகைய வன்முறைச் சம்பவமோ உயிரிழப்போ நடைபெறவில்லை.