“அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் இன்று சூரிய ஒளி சுவாமி நெற்றி பொட்டில் விழும் பேரழகு ஜெய் ஸ்ரீ ராம்” என்று சமீபத்தில் அயோத்தி ராமர் கோவிலில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழுந்ததாக கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் பழையது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் இதே காணொலியை Hindustan Times ஊடகம் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி வெளியிட்டிருந்தது. அதில், “ராமநவமி 2024 அன்று அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் உள்ள ராம்லல்லாவின் சிலைக்கு சூரியன் திலகம் இட்ட காட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலைக் கொண்டு தொடர்ந்து தேடினோம். அப்போது, கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி India Today, “ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று 'சூர்ய திலகம்' ராமர் சிலையை எவ்வாறு அலங்கரிக்ககிறது” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “புதன்கிழமை(ஏப்ரல் 17) அன்று அயோத்தி ராமர் கோவிலில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் ஒளிரும் 'சூர்ய திலகம்' ஆண்டுதோறும் ராம நவமி அன்று நடக்கும்.
இருப்பினும், கோயில் இன்னும் முழுமையாகக் கட்டப்படாமல் இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று சூரியனின் நிலை மாறுவதால், 'சூரிய திலகத்தை' சாத்தியமாக்கிய Optical Mechanismத்தின் இறுதி வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் அபய் கரண்டிகர் கூறினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அயோத்தி ராமர் கோவிலில் உள்ள ராமர் சிலைக்கு சூரிய திலகம் இடும் நிகழ்வு ஆண்டுதோறும் ராமநவமி அன்று நடைபெறும் என்பது தெரிய வருகிறது. 2025ஆம் ஆண்டிற்கான ராமநவமி ஏப்ரல் 6ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சமீபத்தில் அயோத்தி ராமர் கோவிலில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழுந்ததாக வைரலாகும் காணொலி பழையது என்றும் ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் நிகழ்வானது ஆண்டுதோறும் ராம நவமி அன்று மட்டுமே ஏற்படும் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.