Fact Check: “தமிழ்தாய் வாழ்த்து தமிழர்களுக்கானது, திராவிடர்களுக்கானது இல்லை” என்று கூறினாரா தமிழ்நாடு ஆளுநர்?

தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்ததாக புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் வைரலாகி வருகிறது
தமிழ்தாய் வாழ்த்து குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்து
தமிழ்தாய் வாழ்த்து குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்து
Published on
2 min read

இந்தி மாத விழா மற்றும் தூர்தர்ஷன் சென்னையின் பொன்விழா கொண்டாட்டம் கடந்த அக்டோபர் 18ஆம் சென்னையில் நடைபெற்றது. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாடும்போது “திராவிடம்” என்ற சொல்வரும், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரியை மட்டும் தவிர்த்து விட்டு பாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், "தமிழ்த் தாய் வாழ்த்தை துல்லியமாக பாடுவேன்- துன்டு சீட்டு இல்லாமல் தமிழ்தாய் வாழ்த்தை நன்றாக பாடுவேன். தமிழ்தாய் வாழ்த்து தமிழர்களுக்கானது திராவிடர்களுக்கானது இல்லை. ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதாக அக்டோபர் 18ஆம் தேதியிட்ட புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் நியூஸ்கார்ட் போலியானது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்து குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தேடினோம். அப்போது, கடந்த அக்டோபர் 18ஆம் தேதி இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், “"மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று(அக்டோபர் 18) மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

மாண்புமிகு  பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர்மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.

ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு  அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.

தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்." என்று விரிவாக கூறியிருந்தார். இதில், வைரலாகும் நியூஸ் கார்டில் இருப்பது போன்ற எந்த ஒரு கருத்தும் இடம்பெறவில்லை.

தொடர்ந்து, புதிய தலைமுறை ஊடகத்தின் அக்டோபர் 18ஆம் தேதிக்கான சமூக வலைதள பக்கங்களில் தேடியபோதும் வைரலாகும் நியூஸ் கார்டைப் போன்று எதுவும் வெளியிடப்படவில்லை என்று தெரியவந்தது. மேலும், உண்மையில் இந்த நியூஸ் காட்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று புதிய தலைமுறையை தொடர்புகொண்டு கேட்டது சவுத்செக். அதற்கு, அவ்வாறான எந்த ஒரு நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை என்றும் அது போலி என்று விளக்கம் அளித்தனர். மேலும், இதனை அறிவிப்பாகவும் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

புதிய தலைமுறை வெளியிட்டுள்ள அறிவிப்பு
புதிய தலைமுறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

Conclusion:

நம் தேடலின் முடிவாக துன்டு சீட்டு இல்லாமல் தமிழ்தாய் வாழ்த்தை நன்றாக பாடுவேன். தமிழ்தாய் வாழ்த்து தமிழர்களுக்கானது திராவிடர்களுக்கானது இல்லை என்றெல்லாம் தமிழ்நாடு ஆளுநர் கருத்து தெரிவித்ததாக வைரலாகும் புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் எடிட் செய்யப்பட்டது என்றும் அது போலி என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in