“இந்தக் கொடுமையைச் செய்றதுற்கு 20 கோடியை ஒதுக்கியிருக்கும் தமிழ்நாடு அரசை யாரும் கேட்பதில்லை, நான் கேட்பேன், பதில் சொல்லுங்கப்பா” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இவ்வாறு நாய்களைக் கொலை செய்வதற்காக 2024-25 தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி பரப்பப்படுகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இக்காணொலி அதிமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்டது என்றும் நாய்களைக் கொல்வதற்காக தமிழ்நாடு அரசு பட்ஜெட் ஒதுக்கவில்லை என்பதும் தெரியவந்தது. முதலில், காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் உடன் சேர்த்து கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம்.
அப்போது, Harish Kumar என்ற யூடியூப் சேனலில், “தமிழ்நாட்டில் நகராட்சி ஊழியர்களால் தெருநாய்கள் அடித்துக் கொல்லப்பட்டன” என்ற தலைப்பில் வைரலாகும் காணொலி 2021ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. Abdulrahman Abuahamed என்ற ஃபேஸ்புக் பயனரும், “பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாய்களை அடித்து கொண்டு வந்து குப்பைத் தொட்டியில் போடும் காட்சி” என்று 2021ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. காணொலி பதிவிடப்பட்டுள்ள தேதியை கொண்டு பார்க்கையில் இது அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற சம்பவம் என்பது உறுதியாகிறது.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 2024-25 பட்ஜெட்டில் நாய்களைக் கொல்வதற்காக ரூ. 20 கோடி பட்ஜெட் ஒதுக்கியதா என்று பட்ஜெட் அறிக்கையில் தேடினோம். அப்போது, கால்நடை பராமரிப்பு என்ற பகுதியில், “கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உரிய இனப்பெருக்கத் தடை சிகிச்சைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாமல் போனதால், மாநிலத்தில் பல இடங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை உயர்ந்து. அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்திற்கு வந்துள்ளன.
எனவே, விலங்குகள் இனப்பெருக்கத் தடை திட்டத்தை மேலும் முறையாகச் செயல்படுத்திடவும். தமிழ்நாட்டின் பல இடங்களில் இயங்கிவரும் இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்திடவும் 2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மேலும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திற்கு வரும் நிதியாண்டில் 11 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை சிகிச்சை செய்யத்தான் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளதே தவிற, நாய்களைக் கொல்ல நிதி ஒதுக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக நாய்களைக் கொல்ல ரூ. 20 கோடி தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் அது நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், வைரலாகும் காணொலியில் உள்ள சம்பவமும் அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.