
சென்னையின் இரண்டு வட்டாரங்களில் துப்புரவுப் பணிகளைத் தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். ரிப்பன் கட்டடத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் இப்போராட்டம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், “கும்பி (வயிறு) எரியுது! குடல் கருகுது தூய்மை பணியாளர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட இந்த நிலையில்.. ஆகஸ்ட் 17 எழுச்சித்தமிழர் திருமாவளவனுக்கு பூப்புனித நீராட்டு விழா அவசியமா?” என்ற கேள்வியுடன் சமூக வலைதளங்களில் (Archive) திருமாவளவன் கொண்டாட்டத்தில் ஈடுபடும் காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது தெரியவந்தது.
வைரலாகும் காணொலியில் இருப்பது சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு தான என்பதை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது வெளிச்சம் ஊடகம் வைரலாகும் காணொலி தொடர்பாக முழுநீள நேரலை காட்சியை 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி, “எழுச்சித் தமிழர் பிறந்தநாள் விழா - தமிழர் - எழுச்சி நாள்” என்று தலைப்பில் வெளியிட்டுள்ளது.
அதன், 6:00:03 பகுதியில் வைரலாகும் அதே காணொலியின் குறிப்பிட்ட பகுதி இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து, இதுதொடர்பாக கூகுளில் தேடுகையில் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்து தமிழ் திசை ஊடகம் அவரது பிறந்தநாள் தொடர்பாக விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் விசிக தலைவர் திருமாவளவனின் 62வது பிறந்த நாள் விழா நேற்று (ஆகஸ்ட் 16) விமரிசையாகக் கொண்டாடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் விழா தொடர்பாக எதுவும் தகவல் வெளியிட்டுள்ளாரா என்பது குறித்து அவரது சமூக வலைதள பக்கங்களில் தேடியபோது. நேற்று (ஆகஸ்ட் 14) அவரது பிறந்தநாள் விழா தொடர்பான பதிவு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “ஆக17-தமிழர் எழுச்சிநாள். 'மதச் சார்பின்மை காப்போம்' என்னும் கருப்பொருளை மையப்படுத்தி இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுகிறது.
ஆக-16 மாலை 4.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இவ்விழா நடைபெறவுள்ளது. கீழ்க் காணும் அழைப்பிதழில் உள்ளவாறு இசைப்பொழிவு, கவிப்பொழிவு, கருத்துப்பொழிவு மற்றும் வாழ்த்துப்பொழிவு என தொடர் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. உலகநாயகன்-கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் பங்கேற்கிறர். நிறைவாக, திண்டுக்கல் லியோனி உரையாற்றுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நாளை (ஆகஸ்ட் 16) தான் அவரது பிறந்தநாள் விழா “தமிழர் எழுச்சி நாள்” என்று கொண்டாடப்பட உள்ளது தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துப்புரவு தொழிலாளர்கள் கைது செய்யப்படும் நிலையில் திருமாவளவன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று வைரலாகும் காணொலி 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.