Fact Check: திருமாவளவன், திருப்பதியில் காவி உடை அணிந்து சாமி தரிசனம் செய்தாரா? உண்மை என்ன

விசிக தலைவர் திருமாவளவன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காவி ஆடை அணிந்து வழிபாடு நடத்தியதாக சமூக வலைதளங்களில் பரவும் நியூஸ் கார்ட்
Fact Check: திருமாவளவன், திருப்பதியில் காவி உடை அணிந்து சாமி தரிசனம் செய்தாரா? உண்மை என்ன
fifthestatedigital1
Published on
1 min read

கடந்த மே 31 ஆம் தேதியன்று, பாதுகாப்புத்துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவில் உறுப்பினராக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., குழுவினருடன் இணைந்து திருப்பதியில் ஆய்வு மேற்கொண்டதோடு, கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.

இந்த நிகழ்வை ஒட்டி, திருமாவளவன் திருப்பதி கோவிலில் காவி உடை அணிந்து சாமி தரிசனம் செய்ததாகக் கூறி, முன்னணி ஊடகமான 'தந்தி டிவி'யின் லோகோவுடன் கூடிய நியூஸ் கார்ட் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

Fact check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டது என்று தெரியவந்தது.

வைரலாகி வரும் இந்த நியூஸ் கார்டின் உண்மைத்தன்மையை அறிய, தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களை நாம் ஆய்வு செய்தோம். கடந்த மே 31 அன்று தந்தி டிவி வெளியிட்ட அசல் நியூஸ் கார்டை தேடிக் கண்டுபிடித்தோம்.

தந்தி டிவியின் உண்மையான நியூஸ் கார்டில், “திருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்” என்ற வாசகத்துடன், அவர் வெள்ளை நிற ஆடை அணிந்திருக்கும் புகைப்படமே இடம்பெற்றிருந்தது.

மேலும், தற்பொழுது வைரலாக்கப்படும் போலியான நியூஸ் கார்டை உற்றுநோக்கிய போது, அதில் Gemini AI லோகோ இருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம், அதிநவீன ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திருமாவளவனின் வெள்ளை நிற ஆடையைக் காவி நிறமாக டிஜிட்டல் முறையில் மாற்றி எடிட் செய்துள்ளனர் என்பது அப்பட்டமாகத் தெரியவந்தது.

இதனை கூடுதல் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்த, அன்றைய தினம் அங்கு செய்தி சேகரித்த 'News7 Tamil' உள்ளிட்ட பிற செய்தி ஊடகங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் சரிபார்த்தோம். அவற்றிலும் திருமாவளவன் வெள்ளை நிற ஆடையில் மட்டுமே காட்சியளிக்கிறார்.

Conclusion:

மக்களவை உறுப்பினர் திருமாவளவன் திருப்பதியில் வெள்ளை நிற ஆடை அணிந்துதான் சாமி தரிசனம் செய்தார் என்பதே உறுதியான உண்மை. தந்தி டிவியின் அசல் நியூஸ் கார்டை, ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் மார்பிங் செய்து, அவர் காவி உடை அணிந்தது போல் போலியான செய்தியைச் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

logo
South Check
southcheck.in