Fact Check: காரணமின்றி இடிக்கப்பட்டதா திருச்சி ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலின் நுழைவு வாயில்? உண்மை என்ன?

எவ்வித காரணமின்று திருச்சி ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலின் நுழைவு வாயில் இடிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
காரணமின்றி இடிக்கப்பட்ட கோயில் நுழைவு வாயில் என்று வைரலாகும் காணொலி
காரணமின்றி இடிக்கப்பட்ட கோயில் நுழைவு வாயில் என்று வைரலாகும் காணொலி
Published on
2 min read

“திமுகவுக்கு வேற என்ன வேலை இருக்கு ஏண்டா அப்படியே ஸ்ரீரங்கம் கோபுரம் எதிரில் கருங்கல் ஒன்று இருக்கு அதையும் உடைக்க முடியுமா. திருச்சி ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் நுழைவு வாயில் இடிக்கப்பட்டது. செலவு செஞ்சு கட்டியதை எதுக்குடா இடிக்குறீங்க? நாசமா போறவனுங்க. கோவில் சம்மந்தமாக எல்லாத்தையும் இடிச்சு தள்ளுறாங்க” என்ற கேப்ஷனுடன் திருச்சியில் உள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலின் நுழைவு வாயில் இடிக்கப்படும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வலதுசரியினரால் பகிரப்பட்டு வருகிறது. எவ்வித காரணமும் இன்றி இந்த நுழைவு வாயில் இடிக்கப்படுவதாக இத்தகவலைப் பகிர்ந்து வருகின்றனர்.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் விபத்தின் காரணமாக சேதமடைந்த நுழைவு வாயில் பாதுகாப்பு காரணத்திற்காக இடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, தினமணி நேற்று(ஆக. 3) வெளியிட்டிருந்த செய்தியில், “திருச்சி மாவட்டம் சமயபுரம் மரியம்மன் கோயில் நுழைவு வாயிற் சுவரில் லாரி மோதியதில் இடிந்தது. கடந்த 2ஆம் தேதி இரவு சமயபுரத்திலிருந்து கருக்காய் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று நுழைவு வாயிற் சுவர்களில் மோதியதில் கோயிலின் நுழைவுச் சுவர் மற்றும் நுழைவு வாயிலின் மேல் பகுதியில் விரிசல் ஏற்பட்டது.

இதனால் நுழைவு வாயில் சுவர் எந்நேரத்திலும் கீழே விழும் நிலையில் இருந்ததால் இருபுறமும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, அவ்வழியாக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நுழைவாயிற் சுவரின் மேற்பகுதியில் இருந்த மூன்று சாமி சிலைகள் கிரேன் உதவியுடன் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டதுடன், அச்சிலைகள் கோயிலுக்கு சொந்தமான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதன்பின், அருகிலுள்ள கடைகளுக்கு சேதாரம் ஏற்படாத வகையில் நுழைவு வாயில் சுவர் முற்றிலுமாக இடித்து தகர்க்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் நுழைவாயில் சுவரில் லாரி மோதிய செய்தியை ABP Nadu ஊடகம் விரிவாக வெளியிட்டுள்ளது.

மேலும், NewsTamil 24x7 ஊடகம் நுழைவுச் சுவர் இடிக்கப்படுவதை இன்று(ஆக. 3) நேரலை செய்தியாக வெளியிட்டிருந்தது. அதில், 2:30 பகுதியில் அக்கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் பேட்டி அளித்திருந்தார். அதில், “கோயிலுக்கு அருகில் சென்னை நெடுஞ்சாலையின் அரை கிலோமீட்டரில் அமைந்துள்ள சர்வீஸ் சாலைய பயன்படுத்தி எப்போதும் போல பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் எவ்வித அச்சமும் இன்றி சாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், கோயிலின் பொறியாளர்கள் மற்றும் அறங்காவலர் குழுவினர் அனைவரிடமும் ஆலோசித்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையின் உதவியுடன் நுழைவு வாயில் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து லாரி விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு, “எவ்வாறு அந்த வாகனம் இப்பகுதிக்கு வந்தது என்பது தெரியவில்லை. அப்படி வந்திருந்தால் ஏன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்கவில்லை என்பது குறித்து இனிமேல்தான் ஆலோசிக்க வேண்டும் என்றும் இது போன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்" பதில் அளிக்கிறார்.

Conclusion:

நம் தேடலின் முடிவாக காரணமின்றி திருச்சி ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலின் நுழைவு வாயில் இடிக்கப்படுவதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் லாரி மோதி விபத்தின் காரணமாக இடிந்து அபாயகரமான நிலையில் இருந்த நுழைவு வாயில் பாதுகாப்பு காரணத்திற்காக இடிக்கப்பட்டது என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in