

ஜூன் 9ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ‘சிங்க பெண்’ சிறப்பு படை திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அந்நிகழ்வில் பேசிய முதல்வர் விஜய், ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக டிரோன் மூலம் ரோந்து செய்யும் முறை தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்’ என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை தவெக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பகிர்ந்து, வைரலாக்கி வருகிறார்கள்.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் ஏற்கனவே இந்தியாவில் இது போன்ற டிரோன் கண்காணிப்பு முறை உள்ளது என்று நமது ஆய்வில் தெரியவந்தது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை அறிய, காவல்துறையில் டிரோன் மூலம் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து இணையத்தில் தேடினோம்.
2023 ஜூன் மாதம் வெளியான ‘The Indian Express’ செய்தியின்படி, இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகர காவல்துறை சார்பில்தான் ‘டிரோன் காவல் படை (Drone Police Unit)’ முறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இது நகரை வான்வழியாகக் கண்காணித்து, குற்றங்களைக் கட்டுப்படுத்த போலீஸாருக்கு உதவும் வகையில் கொண்டு வரப்பட்டது.
அதேபோல் 2026 ஏப்ரல் மாதம் ‘The Hindu’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியின்படி, தெற்கு இரயில்வே ஹைதராபாத் மண்டலத்தின் கீழ் இயங்கும் இரயில்வே பாதுகாப்பு படை (RPF), ‘Pink Patrol’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், ஹைதராபாத் புறநகர் இரயில்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரத்யேகமாக டிரோன்கள் பயன்படுத்தப்படும் என்றும், அவற்றை பெண் காவலர்களே இயக்குவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், காவல்துறையில் ரோந்துப் பணிகளுக்காக டிரோன்களைப் பயன்படுத்துவதும், குறிப்பாகப் பெண்கள் பாதுகாப்பிற்காக டிரோன் கண்காணிப்பு முறையைச் செயல்படுத்துவதும் ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் திட்டங்கள் என்பது தெளிவாகிறது.
Conclusion:
பெண்கள் பாதுகாப்பிற்காகவும், பொதுக் கண்காணிப்பிற்காகவும் டிரோன்களைப் பயன்படுத்தும் திட்டங்கள் ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையில் உள்ள நிலையில், தவெக அரசுதான் இந்தியாவிலேயே முதன்முறையாக இதனைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போவதாகக் கூறப்படும் தகவல் தவறானது.