“முஸ்லிம்களுக்கும் தீபாவளிக்கும் என்னடா சம்பந்தம்..? சனாதனத்தை ஒழிக்க முஸ்லிம்களுக்கு தீபாவளி பட்டாசு - பரிசு வழங்கிய ஓங்கோல் இளவரசர்..!” என்ற கேப்ஷனுடன் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் திமுகவின் பவள விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் என்றும் தெரியவந்தது. காணொலியின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, நேற்று (அக்டோபர் 23) ANI ஊடகம் தனது எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலியை வெளியிட்டு இருந்தது.
அதில், திமுகவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளது. கிடைத்த தகவலைக் கொண்டு தொடர்ந்து கூகுளில் தேடியபோது, நியூஸ் 18 தமிழ்நாடு நேற்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.
அதன் 1:23 பகுதியில், “திமுக பவளவிழாவை முன்னிட்டு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் உதயநிதி ஸ்டாலின்” என்ற பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இதே தகவலை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அது திமுகவின் பவள விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.