

“நல்லா இருக்குடா meetup உபிஸ் GenZ meetup நடத்தும் குழுவினரை அழைத்து மது விருந்து வைத்த உதய்” என்று கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலாகி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததற்கு, Gen Z தலைமுறையினரிடம் அரசியலைக் கொண்டு சேர்க்கத் தவறியது ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது. இதனைச் சரிசெய்யும் நோக்கில், திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ‘GenZ DMK’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில், உதயநிதி ஸ்டாலின் ‘GenZ DMK’ குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தில், அவர்கள் ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிந்து கைகளில் மது பாட்டில்களை வைத்திருப்பது போலத் தவெக ஆதரவாளர்களால் சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிய முதலில் புகைப்படத்தை உற்று கவனித்தோம். அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு இடதுபுறத்தில் இருக்கும் நபர்களுக்கு இடையேயான இடைவெளியில் முரண்பாடுகள் தெரிவதுடன், அது எடிட் செய்யப்பட்டதற்கான அப்பட்டமான அடையாளங்கள் தென்பட்டன.
தொடர்ந்து, புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்ததில், srihari_facts_checker எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலை 4ஆம் தேதி பதிவிடப்பட்ட உண்மையான புகைப்படம் கிடைத்தது. அந்தப் புகைப்படத்தில், ‘GenZ DMK’ குழுவினர் மிகவும் கண்ணியமான உடையில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நிற்கின்றனர்.
இதன்மூலம், உண்மையான அந்தப் புகைப்படத்தை AI தொழில்நுட்பத்தால் எடிட் செய்து, தவறான முறையில் பரப்பி வருகின்றனர் என்பது தெரியவந்தது
Conclusion:
நம் தேடலின் முடிவாக எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தைக் கொண்டு, உதயநிதி ஸ்டாலின் ’GenZ DMK’ குழுவினரை அழைத்து மது விருந்து கொடுத்ததாக தவறாக பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது.