Fact Check: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தாரா? உண்மை என்ன

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின் விளைவாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூலை 21 அன்று தனது பதவியை ராஜினாமா செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது
Fact Check: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தாரா? உண்மை என்ன
fifthestatedigital1
Published on
2 min read

இந்தியாவில் நீட் மற்றும் இதர போட்டித் தேர்வுகளில் அரங்கேறும் முறைகேடுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; மேலும், நீட் தேர்வு தொடர்பான துயரங்களால் உயிரை இழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் ஒருங்கிணைப்பின் கீழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த மூன்று வாரங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறையினரும் துணை இராணுவத்தினரும் கடுமையான தடியடி நடத்தித் தடுத்தனர். இதற்கிடையில், தொடரும் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவுகள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகளுக்கு முழுப் பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூலை 21 அன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறும் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

Fact check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் அவ்வாறு அவர் பதவி விலகவில்லை என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விரிவான தேடலில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்ததாகத் தெரிவிக்கக் கூடிய எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோ அல்லது நம்பகமான ஊடகச் செய்திகளோ எங்குமே வெளியாகவில்லை என்பது உறுதியானது.

மேலும், ஒன்றிய கல்வி அமைச்சகம் சார்பில் ஜூலை 22 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வத் தகவலின்படி, 'டெல்லியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாடு அன்று நடைபெற்றது. மத்திய அரசு வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும் பள்ளிக்கல்வித் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காகக் கூட்டப்பட்ட இந்த இரு நாள் மாநாட்டில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேரில் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றியுள்ளார்' என்பது தெரியவந்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வரும் சூழலில், கடந்த ஜூலை 23 அன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி காணொளிச் செய்தி ஒன்றை வெளியிட்டார். அக்காணொளியில், வினாத்தாள் கசிவுகளை முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கிலும், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் வகையிலும் புதிய சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் அறிவித்தார். எனினும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் குறித்து பிரதமர் தனது உரையில் எவ்விதத் தகவலையும் குறிப்பிடவில்லை.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் கடிதம் முற்றிலும் புனையப்பட்ட போலி என்பது தெளிவாகிறது.

Conclusion:

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் கடிதம் முற்றிலும் போலியானது மற்றும் ஆதாரமற்றது ஆகும்.

logo
South Check
southcheck.in