“மத்திய அரசு சேவை கூட்டுறவு நிலம் மற்றும் குழு வீட்டுவசதி சங்கத்தின்” லெட்டர்பேடில் மார்ச் 26, 2024ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட எஸ்சி வோஹ்ரா என்பவர் கையெழுத்திட்ட சுற்றறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. அதில், "அனைத்து பிளாட்/ஹவுஸ் உரிமையாளர்களுக்கும் ஓர் எச்சரிக்கை" என்ற தலைப்பில், ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் உள்துறை அமைச்சக ஊழியர்களைப் போல திருடர்கள் வீடுகளுக்குள் நுழைய புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இது நவீன திருட்டு என்றும் அனைவரும் கவனமாக இருக்கும்படியும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் சுற்றறிக்கை போலி என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்றும் அவ்வாறாக ஒன்றிய அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் தெரிய வந்தது. மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அதிகாரப்பூர்வ தேதி அரசாங்கத்தால் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. இதன் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் துவங்கவில்லை என்பது தெரிகிறது.
தொடர்ந்து, இது குறித்து சமூக வலைதளங்களில் தேடுகையில் தமிழ்நாடு காவல்துறை வைரலாகும் அறிக்கையை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி பதிவிட்டு, “ஒன்றிய அரசு ‘நவீன திருட்டு தொடர்பாக’ எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் வைரலாகும் இந்த அறிக்கை போலியானது” என்றும் விளக்கம் அளித்துள்ளது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக நவீன திருட்டு நடைபெறுவதாகவும் அனைவரும் கவனமாக இருக்கும்படியும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் சுற்றறிக்கை போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.