

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அந்தப் பதிவின் நிலைத் தகவலில், "ஜப்பான் கடற்கரையில் 7.6 ரிக்டர் அதிர்ச்சி – சுனாமி எச்சரிக்கை வெளியானது!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த காணொலியை பல பயனர்களும் சமூக வலைதளங்களில் (Archive) பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த வீடியோ நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காட்சிகளாக இருக்கும் என்றும் பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Fact Check
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி பழையது என்று தெரியவந்தது.
டிசம்பர் 8, 2025 அன்று, ஜப்பானின் அமோரி கடற்கரையிலிருந்து 80 கி.மீ தொலைவில் பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நேரப்படி இரவு 11.15 மணிக்கு இந்த நிலநடுக்கம் நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், பகல் நேரத்தில் நிலநடுக்கம் ஏற்படுவது போன்ற காணொலியை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இது சந்தேகத்தை எழுப்பியதால், இது தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்தோம்.
அந்த காணொலிக் காட்சியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இதே காணொலியை பலர் 2024 ஆம் ஆண்டில், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று குறிப்பிட்டு, அப்போதே பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும், ஜப்பானிய ஊடகமும் வைரலாகும் அதே காணொலியை கடந்த 2024ஆம் ஆண்டு பதிவிட்டிருந்தது.
இதன் மூலம் இக்காணொலியானது 2024 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பதிவு செய்யப்பட்ட காட்சியாக இருக்கலாம் என்று தெரிய வந்தது. அதேசமயம், இது எங்கு, எப்போது துல்லியமாகப் பதிவானது என்ற விவரம் நமக்குக் கிடைக்கவில்லை.
Conclusion
முடிவாக நம் தேடலில் 2024ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பான காணொலியை, தற்போது நடந்த நிலநடுக்கம் என்று தவறாகப் பகிர்ந்திருப்பதை கான முடிந்தது.