

கேரளப் பேருந்து பயணத்தின்போது தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, ஷிம்ஜிதா முஸ்தபா என்பவர் தீபக் (42) மீது குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பான சர்ச்சைக்குரிய காணொலி ஒன்றை அவர் வெளியிட்டிருந்த நிலையில், அது சமூக ஊடகங்களில் (Archive) வைரலானது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட தீபக் அவரது அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், ஷிம்ஜிதா முஸ்தபா தற்போது கேரளக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பரவி வரும் அந்தக் காணொலியில், பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றப்படுவதையும், பின்னர் அவர் காவல் நிலையத்தில் இருப்பதையும் காண முடிகிறது.
Fact check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி மற்றொரு சம்பவத்துடன் தொடர்புடையது என்று தெரியவந்தது.
பரவி வரும் காணொலியை ஆய்வு செய்ததில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஜீப்பில் ஏற்றப்படும் பெண்ணின் தோற்றமும், ஷிம்ஜிதா முஸ்தபாவின் தோற்றமும் வேறு வேறாக இருந்ததைக் காண முடிந்தது.
சந்தேகம் எழவே, காணொலியின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் காணொலி குறித்து “News Keralam” ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் கடந்த 2023 நவம்பர் 24 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. காணொலியில், கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் அஸ்வதி என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் பரவி வரும் காணொலியில் குறிப்பிட்டுள்ளவாறு ஷிம்ஜிதா முஸ்தபா கேரளக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்தும் தேடினோம். "கேரளாவின் வடக்கரையில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் வைத்து ஷிம்ஜிதா முஸ்தபா புதன்கிழமை(ஜன 21) கைது செய்யபட்டதாக" தி ஹிந்து செய்தி வெளிஇட்டுள்ளது.
இதன் மூலம், கேரளப் பேருந்து சர்ச்சை காணொலி சம்பவத்தில் தொடர்புடைய ஷிம்ஜிதா முஸ்தபா கைது செய்யப்பட்டதாகக் கூறி பரவும் செய்தி தவறானது. பரவி வரும் காணொலியில் இருப்பவர் ஷிம்ஜிதா முஸ்தபா அல்ல. அஸ்வதி என்ற பெண் கடந்த 2023ஆம் ஆண்டு கேரளாவில் நிகழ்ந்த வேறொரு சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய காணொலியை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
Conclusion:
நம் தேடலில், கேரளப் பேருந்து சர்ச்சை காணொலி சம்பவத்தில் தொடர்புடைய ஷிம்ஜிதா முஸ்தபா கைது செய்யப்பட்டதாகப் பரவும் காணொலி தவறானது என்பது தெளிவாகிறது.