

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர் ஒருவரை கண்ணத்தில் அறைந்ததாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், முதல்வருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தக்கூடிய ஒருவரை முதல்வர் அறைவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
Fact check:
சவுத் செக்கின் ஆய்வில் முதல்வர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்த வந்த நபரை அருகில் இருந்த காவலர்கள் விளக்கி விடும் காட்சியை தவறாக பரப்புகின்றனர் என்பது தெரிய வந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மை குறித்து உண்மைத்தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர் தினகரன் ராஜாமணி என்பவர் வைரலாகும் அதே காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி பதிவிட்டு இருந்தார்.
அதில், திருநெல்வேலியில் மறைந்த பாளையங்கோட்டை ஒன்றியத் தலைவர் தங்கபாண்டியனின் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் என்ற தகவலுடன் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது.
அக்காணொலியின் 00:06 முதல் 00:08 வரையிலான பகுதியில் வைரலாகும் அதே காணொலி இடம்பெற்றிருந்தது. அதில் , ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்த வரக்கூடிய திமுக தொண்டரை முதல்வருக்கு அருகில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியதை நம்மால் கான முடிகிறது. பாதுகாப்பு காரணத்திற்காக அவரை தடுத்து நிறுத்தியதை புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும் அந்த நபர் முதல்வர் ஸ்டாலின் இடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று சென்றார். தொடர்ந்து, அவர் அணிவித்த சால்வையை ஸ்டாலின் கையில் பெற்றுக்கொண்டு அங்கிருந்து செல்கிறார். ஆனால், இப்பகுதி வைரலாகும் காணொலியில் இடம் பெறவில்லை. மேலும், பத்திரிக்கையாளர் தினகரன் ராஜாமணி வெளியிட்டுள்ள காணொலியின் வேகத்தை கூட்டி எடிட் செய்து அதனையே தவறாக திருத்தி பகிர்ந்து வருகின்றனர்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக முதல்வருக்கு சால்வை அணிய வந்த திமுக தொண்டரை அவரது பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தும் காட்சியை தவறாக எடிட் செய்து திரித்து பரப்பி வருகின்றனர் என்று தெரிய வந்தது.