

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு எதிராகப் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்தப் போஸ்டரில், “விளாத்திகுளம் எங்க இருக்கு? தூத்துக்குடி மாவட்டத்துல இருக்கு! தூத்துக்குடி MP யாரு? கனிமொழி! மணிப்பூருக்கு விளக்கு பிடித்த கனிமொழிக்கு இந்த விளாத்திக்குளம் எங்க இருக்குனு தெரியல பாத்தியா!” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மணிப்பூர் கலவரத்திற்காகக் குரல் கொடுத்த கனிமொழி, தன் சொந்தத் தொகுதியில் நடந்த சம்பவத்தைக் கண்டுகொள்ளவில்லை என்று விமர்சிக்கும் நோக்கில் இந்தப் படம் பகிரப்பட்டு வருகிறது
Fact-Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் இப்புகைப்படத்தை ஆழ்ந்து கவனித்தபோது அதில் பல முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக அந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ‘கனிமொழி’ மற்றும் ‘பாத்தியா’ உள்ளிட்ட முக்கியத் தமிழ் வார்த்தைகள் தெளிவற்ற எழுத்துப் பிழைகளுடன் காணப்படுகின்றன.
மேலும் அப்படத்தின் வலது புற ஓரத்தில் Gemini AI-யின் லோகோ தெளிவாக இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தப் படம் ஒரு நிஜமான போஸ்டர் அல்ல என்பதும், இது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு போலிப் படம் என்பதும் முதற்கட்ட ஆய்விலேயே தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மேலும் உறுதிப்படுத்துவதற்காக, Hive Moderation போன்ற செயற்கை நுண்ணறிவைக் கண்டறியும் இணையதளத்தில் அப்புகைப்படத்தைச் சோதித்தோம். அதிலும் வைரலாகும் இப்புகைப்படம் 99.9% ஏஐமூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலியான புகைப்படம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியானது.
Conclusion:
முடிவாக, மணிப்பூருக்கு விளக்கு பிடித்த கனிமொழிக்கு விளாத்திகுளம் எங்க இருக்குனு தெரியல பாத்தியா என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போஸ்டர் முற்றிலும் போலியானதாகும். இது ஒரு நிஜமான போஸ்டர் அல்ல, மாறாகச் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படமாகும்.