

திமுக தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்களின் சொத்துகள் அடமானம் வைக்கப்படுவதாக ஒரு தகவலைப் பரவி வருகிறது. புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி ஒன்றை ஆதாரமாகக் காட்டி சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் இது முற்றிலும் தவறாகத் திரிக்கப்பட்ட செய்தி என்பது உறுதியாகிறது.
பரப்பப்படும் அந்தச் செய்தியின் காணொலியானது புதிய தலைமுறை தளத்தில் தற்போது பொதுப்பார்வையில் இருந்து நீக்கப்பட்டு 'Unlisted' பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அதன் டிஷ்கிரிப்ஷன் பகுதியில் விவரக் குறிப்புகளை ஆய்வு செய்ததில், அது 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி பதிவேற்றப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.
மதுரை கீழவெளி வீதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் அடிப்படையிலேயே அந்தச் செய்தி அப்போது வெளியிடப்பட்டது. அக்காணொலியில் இடம்பெற்றுள்ள ஆவணங்களிலேயே 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி என்ற கால்குறிப்பு மிகத் தெளிவாகக் காணப்படுகிறது.
மேலும், 2017 மே மாதத்தில் விகடன் இதழும் "அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள்" என்ற தலைப்பில் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது. மிக முக்கியமாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை போக்குவரத்துக் கழகம் அளித்த விளக்கத்தில், சொத்துக்களை அடமானம் வைக்கும் நடைமுறையானது 1974ஆம் ஆண்டு முதலே பயன்பாட்டில் இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ஒரு நிர்வாக நடைமுறையை, ஏதோ தற்போதுதான் முதல்முறையாக நடப்பது போலவும், அதுவும் தற்போதைய திமுக ஆட்சியில் நடப்பது போலவும் சமூக வலைதளங்களில் தவறாக சித்திரத்தை உருவாக்கி வருகின்றனர்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, இந்த செய்தி 2017ஆம் ஆண்டு வெளியான ஒன்று என்பதும், போக்குவரத்துக் கழகங்களின் சொத்துகள் அடமானம் வைக்கப்படுவது கடந்த 50 ஆண்டுகளாக நடந்துவருகிறது என்பதும் தெளிவாகிறது. ஆனால், இந்த பிரச்சனையை தற்போது நடந்ததுபோல செய்தியைத் திரித்துப் பரப்புகின்றனர்.