Fact check: விவசாயிகளிடம் ஆக்ரோஷமாக பேசும் பெண்மணி; தற்போதைய விவசாயிகள் போராட்டத்தில் நடைபெற்ற நிகழ்வா?

விவசாயிகள் டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கண்டித்து வயதான பெண் ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசியதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வயதான பெண்மணி ஒருவர் கோபத்துடன் கூச்சலிட்டார் என்று வைரலாகும் காணொலி
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வயதான பெண்மணி ஒருவர் கோபத்துடன் கூச்சலிட்டார் என்று வைரலாகும் காணொலி

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று வேளாண் மசோதாக்களை தன்னிச்சையாகக் சட்டமாக நிறைவேற்றியது ஒன்றிய பாஜக அரசு. இவை விவசாயிகளுக்கு எதிராகவும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாகவும் இருப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அச்சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது.

அச்சமயம், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவது என சில வாக்குறுதிகள் அரசு தரப்பில் வழங்கப்பட்டிருந்தது. அவை நிறைவேற்றப்படாத நிலையில் விவசாயிகள் தற்போது மீண்டும் டெல்லியை நோக்கி அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், “பஞ்சாப் பொதுமக்களை பிரதிபலிக்கும் இந்த அம்மாவுக்கு பாராட்டுகள். பஞ்சாபில் சில விவசாயிகள் அமைப்பு காலிஸ்ஸ்தானியர்களுடன் சேர்ந்து கொண்டு திட்டமிட்டு முக்கிய சாலைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தேர்தல் காலம் என்பதால் எந்த அரசாங்கமும் தைரியமாக அதுவும் விவசாயிகள் போர்வையில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க யோசிப்பார்கள் இதை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களுக்கும் அரசுக்கும் பெரிய நெருக்கடி கொடுக்கவே இந்த சதி திட்டம்” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், டெல்லி நோக்கிச் செல்லும் விவசாயிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கண்டித்து வயதான பெண் ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசியதாக அக்காணொலி பரப்பப்பட்டு வருகிறது.

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இது 2022ஆம் ஆண்டு வெளியான பழைய காணொலி என்பது தெரியவந்தது. முதலில், இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2022ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி இதே காணொலி Radio India என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

அதில், “சாலையை மறித்து இருந்த விவசாயிகளிடம் கோபம் கொள்ளும் பெண்மணி” என்று பஞ்சாபி மொழியில் கேப்ஷன் இடப்பட்டிருந்தது. இதன் மூலம் இது பழைய காணொலி என்று உறுதியாகிறது. மேலும், இதே காணொலியை Scroll Punjab என்ற பேஸ்புக் பக்கத்திலும் மற்றும் Focus Punjab Te என்ற யூடியூப் சேனலிலும் 2022ஆம் ஆண்டு பதிவாகி இருப்பது தெரியவந்தது. மேலும், இந்தியா டுடே ஊடகமும் இதனை பேக்ட்செக் செய்திருந்தது. அதில், காணொலியில் காணப்படும் “Jagadambey” என்ற பேருந்து சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதன் உரிமையாளர் கேசவ் கின்கர் சிங்லா அளித்த விளக்கத்தின் படி, “2022ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள் ஈடுபட்ட போராட்டத்தை இக்காட்சிகள் காட்டுவதாகவும் இது விவசாயிகள் போராட்டம் இல்லை” என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாட்டியாலாவில் தனக்குச் சொந்தமான பெட்ரோல் பங்கிற்கு வெளியே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக சிங்லா விளக்கினார்.  போராட்டத்தின் போது தானும் உடனிருந்ததாகவும், வீடியோவில் உள்ள பெண் சாலை மறியலால் விரக்தியடைந்த ஒரு வழிப்போக்கர் என்பதையும் உறுதிப்படுத்தினார்.  இருப்பினும், அவ்வழியாகச் சென்ற ஒரு சில விவசாய சங்கத் தலைவர்களும் போராட்டத்தில் அவர்களுடன் அமர்ந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Conclusion:

நம் தேடலின் முடிவில் டெல்லி நோக்கிச் செல்லும் விவசாயிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கண்டித்து வயதான பெண் ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசியதாக வைரலாகும் காணொலி 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பழைய நிகழ்வு என்றும் தற்போதைய விவசாயிகள் போராட்டத்திற்கும் இக்காணொலிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in