Fact Check: இரு கைகளும் இல்லாத பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும் வைரல் காணொலி உண்மையா?

இரு கைகளும் இல்லாத இளம் பெண் ஒருவர் ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசங்களை நிகழ்த்துவதாக சமூக வலைதளங்களில் பரவும் வைரல் காணொலி
Fact Check: இரு கைகளும் இல்லாத பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும் வைரல் காணொலி உண்மையா?
fifthestatedigital1
Published on: 
2 min read

இரு கைகளும் இல்லாத இளம் பெண் ஒருவர் உடற்பயிற்சி அரங்கில் மிகக் கடினமான ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசங்களை அசாத்திய சமநிலையோடு நிகழ்த்துவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் சவால்களை வென்றெடுத்த சாதனைப் பெண் எனப் பாராட்டி நெட்டிசன்கள் பலரும் இக்காணொலியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Fact Check:

நமது தேடலில் வைரலாகும் காணொலி AI மூலம் உருவாக்கப்பட்ட போலியானது என்பது உறுதியாகியுள்ளது.

வைரலான இக்காணொலியின் உண்மைத்தன்மையை அறிய சவுத்செக் குழு பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொண்டது. முதல் கட்டமாக, காணொலியின் முக்கிய காட்சிகளைப் பிரித்தெடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது உண்மையான ஒரு வீராங்கனை நிகழ்த்திய நிகழ்வு என்பதற்கான நம்பகமான ஊடகச் செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை.

மாறாக, இந்த அசல் காணொலி செப்டம்பர் 13 அன்று இன்ஸ்டாகிராமில் Arena Athletics என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருப்பதைக் கண்டறிய முடிந்தது. அந்தப் பதிவிலேயே இக்காணொலிக்கு ‘AI-generated content’ (செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது) என்ற அதிகாரப்பூர்வ எச்சரிக்கை லேபிள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல பார்வையாளர்களும் கருத்துப் பகுதியில் இது ஏஐ காணொலி எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அடுத்த கட்டமாக, இக்காணொலியின் தொழில்நுட்பத் தன்மையை ஆய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு கண்டறியும் மென்பொருளான Hive Moderation தளத்தின் சோதனை செய்யப்பட்டது. அந்த ஆய்வில் இக்காணொலி 98.9 சதவீதம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (AI-generated) உருவாக்கப்பட்டது எனத் துல்லியமாக உறுதி செய்யப்பட்டது.

Conclusion:

சவுத்செக் மேற்கொண்ட விரிவான ஆய்வின் முடிவில், இரு கைகளும் இல்லாத பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசங்களை மேற்கொள்வதாகப் பரவும் காணொலி நிஜமானது அல்ல என்பது முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இக்காணொலி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் AI லேபிளுடன் பகிரப்பட்ட காணொலியைச் சிலர் உண்மை எனத் தவறாகக் கருதி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் உறுதியாகிறது. எனவே, இக்காணொலி உண்மைக்கு மாறானது, முற்றிலும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியானது.

logo
South Check
southcheck.in