Fact Check: தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி பரவும் காணொலி? உண்மை என்ன

தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
Fact Check: தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி பரவும் காணொலி? உண்மை என்ன
fifthestatedigital1
Published on: 
2 min read

விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சித்தரிக்கும் ஒரு காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தக் காணொலியில் பெண் ஒருவர் காவல்துறையினரிடம் ஆவேசமாக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பேருந்து நிலையத்தில் தன்னிடம் போதை ஆசாமி ஒருவர் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும், தமிழ்நாட்டு பெண்களுக்கு இதுதான் பாதுகாப்பா என அந்தப் பெண் சரமாரியாக கேள்வி எழுப்பும் காட்சிகள் அதில் உள்ளன.

Ahamed Sabi

Fact Check:

சவுத்செக் உண்மை சரிபார்ப்புக் குழு மேற்கொண்ட விசாரணையில் தற்போது வைரலாகும் இந்தக் காணொலி 2 ஆண்டுகள் பழையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் இந்தக் காணொலி எடுக்கப்பட்ட 2024ஆம் ஆண்டு சமயத்தில் தவெக ஆட்சியில் இல்லை, திமுக தான் ஆட்சியில் இருந்தது. முதலில் வைரலாகும் காணொலி தினமலர் பெயரில் வெளியாகி இருந்ததால் அதன் சமூக ஊடகப் பக்கங்களில் எப்போது வெளியானது என்பது குறித்துத் தேடினோம்.

அதில் ஜூன் 15, 2024 அன்று வைரலாகும் அதே காணொலி தினமலர் பேஸ்புக் பக்கத்தில் 'பெண்கள் பாதுகாப்பு சந்தி சிரிக்குது: கதறிய பெண்' என்ற தலைப்பில் வெளியாகி இருப்பதை தினமலர் சமூக வலைதளப் பக்கத்தில் கண்டுபிடித்தோம். நமது மேலதிகத் தேடலில் இதே பெண் ஆவேசமாகப் பேசும் காணொலியை தந்தி டிவி ஜூன் 15, 2024 அன்றே 'பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல.. பெண்ணிடம் அத்துமீறல்... ஆவேசத்தில் கொதித்த பெண்' என்ற தலைப்பில் தந்தி டிவி ஊடகத்திலும் வெளியிட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக செய்திகள் ஏதேனும் வெளியாகியுள்ளனவா எனத் தொடர்புடைய வார்த்தைகள் துணையுடன் தேடியபோது, விகடன் இணையதளத்தில் ஜூன் 16, 2024 அன்று 'கரூர்: பேருந்து நிலையத்தில் பெண் பயணியிடம் அத்துமீற முயன்ற போதை நபர்கள்; தாமதமாக வந்ததா போலீஸ்?' என்ற தலைப்பில் விகடன் செய்தி வெளியிட்டுள்ளதைக் கண்டறிந்தோம்.

அதில், கரூர் பேருந்து நிலையத்தில் பெண் பயணியிடம் அடையாளம் தெரியாத நபர்கள் மதுபோதையில் தொந்தரவு செய்ததால், இரவு நேரத்தில் புகார் அளிக்க ஒரு போலீஸார் கூட இல்லை என அந்தப் பெண்மணி குற்றம்சாட்டினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு சேலம் மார்க்கத்தில் சென்ற பேருந்தில் அந்தப் பெண்ணை போலீசார் பத்திரமாக வழியனுப்பி வைத்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைரலாகும் இந்தச் சம்பவம் நடந்த 2024ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தது, தவெக 2026 மே மாதம்தான் ஆட்சிக்கு வந்தது.

Conclusion:

முடிவாக, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி தற்போது பகிரப்படும் காணொலி 2024ஆம் ஆண்டு வெளியான 2 ஆண்டுகள் பழைய காணொலி என்பது சவுத்செக் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பழைய காணொலியை தற்போதைய தவெக ஆட்சியில் நடந்தது போலத் தவறான தகவலுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

logo
South Check
southcheck.in