“உண்மைய சொல்றதுக்கும் ஒரு மனசு வேணும். வாழ்த்துகள்” என்ற கேப்ஷனுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசக்கூடிய காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், “ஏதோ ஆட்சி பொறுப்புக்கு வந்தோம், பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம். சில கவர்ச்சி திட்டங்களை செய்தோம். மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலில் நிற்போம்” என்று பேசுகிறார். இதன்மூலம் தேர்தல் மற்றும் பதவி மோகம் குறித்த உண்மையை ஸ்டாலின் பேசியதாக கூறி இக்காணொலி பகிரப்பட்டு வருகிறது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்று தெரிய வந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, தமிழ்நாடு அரசின் அன்புக்கரங்கள் என்ற திட்டத்தை துவக்கி வைத்த போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று Sun News ஊடகம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி நேரலை காணொலி ஒன்றை வெளியிட்டு இருந்தது.
அதன் 4:40 பகுதியில் பேசும் ஸ்டாலின், “பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ ஆட்சி பொறுப்புக்கு வந்தோம், பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம். சில கவர்ச்சி திட்டங்களை செய்தோம். மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலில் நிற்போம் என்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் எங்களின் அடிப்படையே பதவி அல்ல. பொறுப்பு தான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது. அதன் ஒரு பகுதியாகத் தான் இந்த அன்புக்கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்” என்று கூறுகிறார்.
இதில், அவர் அரசியல் மற்றும் பதவி மோகம் குறித்து பேசிய பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாக திரித்து பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது.
Conclusion:
முடிவாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் அன்பு கரங்கள் திட்டத்தை துவக்கி வைத்து பேசிய காணொலியின் ஒரு சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாகத் திரித்துப் பரப்புகின்றனர் என்று நம் தேடலில் தெரிய வந்தது.