தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன. இவை வதந்திகள் என்று காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டாலும் கூட தொடர்ச்சியாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், “தயவு செய்து உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இந்த தகவலை பகிருங்கள். இன்று கூட மேடவாக்கத்தில் ஏழு குழந்தைகளைக் கடித்தியதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது போன்று உயிருடன் கொலை செய்வது எல்லாம் எவ்வளவு கொடுமையானது, அந்த குழந்தைளின் வாயை அடைத்து வைத்து சித்திரவதை செய்து கொலை செய்கின்றனர். தயவு செய்து உங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக பள்ளியில் இருந்து தான் இது போன்று குழந்தைகளை கடத்திச் செல்கின்றனர்” என்று பெண் பேசும் ஆடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. மேலும், தான் காவல் ஆணையர் அலுவலகத்தில் தூய்மைப்பணியாளராக பணியாற்றி வருகிறேன் என்றும் அப்பெண் கூறுகிறார். அந்த ஆடியோ உடன் புர்கா அணிந்த பெண் ஒருவர் ஒரு சிறுவனை ஆட்டோவில் கடத்தும் காணொலி ஒன்றும் சேர்ந்து வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் வதந்தி என்றும் கடத்தப்படுவது போன்ற காணொலி எகிப்தில் புனையப்பட்டு எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது. முதலில், காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, masrawy என்ற எகிப்து ஊடகம் 2022ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “
சமூக வலைதளங்களில் வைரலான புர்கா அணிந்த பெண் குறித்த காணொலி புனையப்பட்டது என்று எகிப்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இதனை உருவாக்கிய நபர்கள் எகிப்தின் சோஹாக் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் என்பது தெரியவந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அதே தேதியில் elwatannews மற்றும் elbalad என்ற எகிப்து ஊடகங்கள், இக்காணொலியை உருவாக்கிய நான்கு பேரின் கைது செய்யப்பட்ட புகைப்படத்துடன் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. வதந்தி பரப்பிய இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எகிப்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை மேடவாக்கத்தில் குழந்தைகள் கடத்தப்படுவது குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு ஏதும் வெளியிட்டுள்ளதா என்று அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தேடினோம். அப்போது, இன்று (மார்ச் 2)ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “சமீபத்தில் மேடவாக்கம் பகுதியில் ஏழு குழந்தைகளின் கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், பொதுமக்கள் கவனமாக இருப்பதுடன், தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், பெண் ஒருவரின் குரல் பதிவுடன் கூடிய குழந்தை கடத்தல் தொடர்பான பொய்யான காணொளிப் பதிவு ஒன்று வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.
இது தொடர்பாக, புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பிப்ரவரி 28ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை விரைந்து கைது செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும், மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கிறது.
இது போன்ற போலியான செய்திகளை கேட்டறிந்தாலோ காணொளிகளை பார்க்க நேர்ந்தாலோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ. பதற்றமடையவோ தேவையில்லை என்று சென்னை பெருநகர காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சென்னை மேடவாக்கத்தில் ஏழு குழந்தைகள் கடத்தப்பட்டதாக வைரலாகும் ஆடியோ வதந்தி என்றும் புர்கா அணிந்த பெண் ஒருவர் சிறுவனை கடத்துவது போன்று வைரலாகும் காணொலியில் பதிவான சம்பவம் எகிப்து நாட்டில் புனையப்பட்டு எடுக்கப்பட்டது என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.