fifthestatedigital1
Tamil

Fact Check: தமிழகத்தில் தவெக ஆட்சியில் மின்சாரம் இல்லாததால் மின்கம்பிகளில் சிறுவர்கள் விளையாடுவதாகப் போலி காணொலி? உண்மை என்ன

மின்சாரம் இல்லாத மின்கம்பத்தில் ஆபத்தான முறையில் விளையாடும் சிறுவர்கள் எனும் காணொலி தமிழகத்தில் தவெக ஆட்சியில் நடைபெற்றதாக கூறி பகிரப்பட்டு வருகிறது

Southcheck Network

தமிழகத்தில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மின்வெட்டுப் பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களில் தவெக அரசை விமர்சிக்கும் வகையில் ஒரு காணொலி வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. அந்த காணொலியில், வெள்ள நீர் சூழ்ந்த ஒரு பகுதியில் இருக்கும் மின் கம்பத்தின் மீதும், மின் கம்பிகளின் மீதும் சிறுவர்கள் ஆபத்தான முறையில் ஏறி விளையாடுவதோடு, அங்கிருந்து தண்ணீருக்குள் குதிப்பதையும் காண முடிகிறது. இந்த காணொலியைப் பகிரும் சமூக வலைத்தளப் பயனர்கள், தமிழகத்தில் விஜய் ஆட்சியில் கரண்ட் இல்லாததால் சிறுவர்கள் மின் கம்பிகளில் ஏறி விளையாடுகிறார்கள் என்றும், வேறு எந்த ஆட்சிலும் இதுபோன்ற காட்சிகளைக் காண முடியாது என்றும் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொலி தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல என்பதும், இது 2025 ஆம் ஆண்டு பீகாரில் நடந்த பழைய நிகழ்வு என்பதும் அம்பலமாகியுள்ளது.

வைரலாகி வரும் இந்த காணொலியின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்தபோது, இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று தெரியவந்தது. முதற்கட்டமாக, தமிழகத்தில் இதுபோன்று மின் கம்பிகளில் சிறுவர்கள் ஏறி விளையாடியதாக அண்மையில் ஏதேனும் செய்திகள் வெளியாகி உள்ளதா என்று தேடியபோது, அதுபோன்ற எந்தவொரு அதிகாரப்பூர்வ செய்தியும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, வைரல் காணொலியின் காட்சிகளைச் சில புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது, இந்த காணொலிக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியானது. இந்த காணொலி கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே இணையத்தில் வெளியாகி உள்ளது. செய்தி ஊடகங்களான நியூஸ் அரேனா இந்தியா, டைம்ஸ் நவ் மற்றும் இந்தியா டைம்ஸ் ஆகியவை தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் இந்த காணொலியைப் பகிர்ந்துள்ளன.

அவற்றின் செய்திகளின்படி, பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, அங்குள்ள உள்ளூர் மக்கள் மற்றும் சிறுவர்கள் மின் கம்பங்களையும், உயர் அழுத்த மின் கம்பிகளையும் தங்களின் நீச்சல் பலகையாகப் பயன்படுத்திப் பொறுப்பற்ற முறையில் ஆற்றில் குதித்து விளையாடியபோது எடுக்கப்பட்ட காணொலி இதுவாகும். இந்த ஆபத்தான செயல் அப்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

மேலும், தமிழ்நாட்டில் தவெக அரசு 2026 ஆம் ஆண்டு மே மாதம்தான் பொறுப்பேற்றது. ஆனால், இந்த காணொலியோ அதற்கு பல மாதங்களுக்கு முன்பே, அதாவது 2025 ஆம் ஆண்டு செப்டம்பரிலேயே பீகாரில் எடுக்கப்பட்டதாகும். எனவே, இந்த காணொலிக்கும் தற்போதைய தமிழக மின்வெட்டுப் பிரச்சனைக்கும் அல்லது விஜய் அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.

Conclusion:

சமூக வலைத்தளங்களில் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை விமர்சிப்பதற்காகப் பரப்பப்படும் இந்த காணொலி முற்றிலும் போலியானது. கடந்த 2025 ஆம் ஆண்டு பீகார் மாநில வெள்ளத்தின்போது மின் கம்பிகளில் சிறுவர்கள் விளையாடிய பழைய காணொலியை எடுத்து, தற்போதைய தமிழ்நாட்டின் சூழலோடு பொருத்தித் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர் என்பதே உண்மைச் சரிபார்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Fact Check: Mamata Banerjee clashes with Kolkata Police during student protests? No, image is AI-generated

Fact Check: സിജെപി സമരവുമായി ബന്ധപ്പെട്ട വിവാദപ്രസ്താവനയില്‍ ടിജി മോഹന്‍ദാസിനെ പൊലീസ് അറസ്റ്റ് ചെയ്തോ? ചിത്രത്തിന്റെ സത്യമറിയാം

Fact Check: ಇದು ಅಸ್ಸಾಂ ಪ್ರವಾಹದ ನಂತರ ಮೃತದೇಹಗಳ ದೃಶ್ಯವೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை திட்டம்: முதலில் தவெக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதா?

Fact Check : ప్రధాని మోదీని దూషించినందుకు తల్లిదండ్రులు కుమార్తెను కొట్టారా? లేదు, వైరల్ వీడియో పాతది