“மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி மாவட்ட அமைச்சராக இருந்தாலும் சரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தாலும் சரி அனைவரும் கிறிஸ்தவ மத போதகருக்கு பிறகு தான். இது தூத்துக்குடி மாவட்டம் தமிழகம் எங்கே போகிறது சிந்திப்பீர்!!!” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
அதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், காவல் உயர் அதிகாரி உட்பட பல்வேறு அதிகாரிகள் சூழ்ந்திருக்க பாதிரியார் உடையில் இருக்கும் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறதே தவிர அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு இல்லை என்று கூறி இப்புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இப்புகைப்படம் தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழாவின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
பகிரப்படும் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறையில் தேடிப் பார்த்தோம். அப்போது, தமிழ்நாட்டின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவனின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இப்புகைப்படத்தை கடந்த ஜூலை 26ஆம் தேதி பதிவிட்டு இருந்தார். அதில், “தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 443வது திருவிழா கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலைக் கொண்டு கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, தினத்தந்தி ஊடகம் திருவிழா தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 443-வது ஆண்டு பெருவிழா இன்று (ஜுலை 26, சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணியளவில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. இந்த திருப்பலி முடிந்ததும் கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது.
பனிமய மாதா உருவம் பொறித்த கொடி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்செய்தியில் இடம்பெற்றுள்ள கொடிமரத்தின் படம் அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள புகைப்படத்துடன் ஒத்துப்போகிறது. இவற்றைக்கொண்டு வைரலாகும் புகைப்படம் பனிமயமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்தின் போது பேராலய வாளகத்திற்குள் எடுக்கப்பட்டிருப்பது என்று தெளிவாகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக வைரலாகும் புகைப்படம் அரசு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது அல்ல என்றும் அது தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 443வது திருவிழா கொடியேற்றத்தின் போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், பேராலய நிகழ்ச்சி என்பதால் பாதிரியாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.