இந்து முன்னணியினர் நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நாளை (ஜூன் 22) நடைபெற உள்ளது. பாஜகவின் தலைவர்கள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், “நூறு கல்லூரி மாணவிகள் சேர்ந்து பாடிய கந்த சஷ்டி கவசம் :- தமிழகத்தின் அடுத்த இந்து சனாதனிகள் மனம் உருகி அருமையாக பாடிய கந்த சஷ்டி கவசம்” என்ற கேப்ஷனுடன் முருக பக்தர்கள் மாநாட்டில் கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாடியதாக கூறி சமூக வலைதளங்களில் (Archive) காணொலி பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி 2022ஆம் ஆண்டு வடபழனி முருகன் கோவில் கந்த சஷ்டி விழாவின்போது எடுக்கப்பட்டது என்று தெரிய வந்தது.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெற்றதா என்பதை கண்டறிய வைரலாகும் காணொலியை முதலில் ஆய்வு செய்தபோது, 3:54 பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேடையில் நிற்கிறார். ஆனால், இம்மாநாட்டிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுகவினர் மற்றும் அமைச்சர் சேகர் பாபு மாநாட்டில் பங்கேற்கவில்லை.
தொடர்ந்து இது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “100 கல்லூரி மாணவிகள் ஒன்றாக பாடிய கந்த சஷ்டி கவசம்” என்ற தலைப்பில் 2022ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி AALAYA TV என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் காணொலியின் முழுநீள பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் 44வது வினாடியில் வைரலாகும் காணொலியில் உள்ள அதே பகுதி இடம் பெற்றுள்ளது.
மேலும், தேடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி தந்தி டிவி இது தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், சென்னை வடபழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான (2022) கந்த சஷ்டி விழா, அக்டோபர் 24ம் தேதி தொடங்கியது.
கோயிலில் அக்டோபர் 23ஆம் தேதி மாலை, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை கல்லூரி மாணவ, மாணவிகள் 108 பேர், கந்த சஷ்டி கவசம் பாடும் நிலழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து கந்த சஷ்டி கவசத்தை பாடினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை 2022ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி NewsTamil 24x7 ஊடகமும் வெளியிட்டுள்ளது.
Conclusion:
முடிவாக 2022ஆம் ஆண்டு வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவின்போது எடுக்கப்பட்ட காணொலியை மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் 100 கல்லூரி மாணவிகள் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடியதாக தவறாக பரப்பி வருகின்றனர்.