பிரதமர் மற்றும் அமைச்சர்கள் முன்பாக ஒன்றிய அரசை விமர்சித்த எம்.பி அமோல் கோல்ஹே 
Tamil

Fact Check: ஒன்றிய அரசை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் விமர்சித்தாரா எம்.பி. அமோல் கோல்ஹே?

எம்‌.பி அமோல் கோல்ஹே ஒன்றிய அரசை விமர்சித்து பிரதமர் மோடி அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்பாக பேசியதாக காணொலி ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

“நாடாளுமன்றத்தில் மைனாரிட்டி சங்கி பாஜகவை கிழித்து தொங்கவிட்ட என்.சிபிMP” என்று தேசியதவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி அமோல் கோல்ஹே பேசும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பேசும் அவர் “இந்த நாட்டில் குடிக்கும் தண்ணீர் பாட்டில் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், நம்முடைய விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை வெறும் 22 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதுதான் நீங்கள் (பாஜக அரசு) விவசாயிகளை வளப்படுத்த எடுத்த நடவடிக்கையா.

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வாங்கும் டூவீலருக்கு(Bike) 28% ஜிஎஸ்டியாம்.. ஆனா அதே ஒரு தொழிலதிபர் வாங்கும் ஹெலிகாப்டருக்கு வெறும் 5% ஜிஎஸ்டி தானாம்.. இதென்ன நியாயம்? தற்போது இந்த பாரத நாட்டில் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. இதையா உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடு சாதிக்க வேண்டும்? உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியலில் 125 நாடுகளில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. அதாவது பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கையை விட பின்தங்கி இருக்கிறோம். இது அவமானம் இல்லையா?

நாட்டில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியை பற்றி பேசுகிறார்கள்; ஆனால் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடப்பதை பற்றி எப்போது பேசுவார்கள்? சில வருடங்களுக்கு முன்பு 'ஷோலே'னு ஒரு படம் வந்தது. அதில் ஒரு வசனம் வரும் நீங்களும் நன்கு அறிவீர்கள்! சார் நிலைமை இப்படி இருக்க.. இந்த அரசாங்கத்திற்கு(பாஜக) எதிராக யாரும் பேசக்கூடாது என மிரட்டுகிறார்கள் மீறி பேசினால் உங்க வீட்டுக்கு ED, CBI, IT வந்துவிடும்” என்கிறார். இதனைக் கேட்டுக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பதிலளிக்க முடியாமல் திணறுவது போன்று காணொலி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இக்காணொலி எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜுலை 1ஆம் தேதி அமோல் கோல்ஹே பாராளுமன்றத்தில் பேசிய காணொலியை Sansad TV பதிவிட்டுருந்தது. அதில், 1:20 பகுதியில் வைரலாகும் காணொலியில் அவர் பட்டிணி குறியீடு குறித்து பேசும் தகவல் இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியாக, 1:56 பகுதியில் பைக் மற்றும் ஹெலிகாப்டர் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி குறித்து பேசுகிறார். அதைத்தொடர்ந்து, வைரலாகும் காணொளியில் உள்ள தகவல்களை வெவ்வேறு பகுதிகளில் எம்பி பேசுகிறார்.

Sansad TVயில் பதிவேற்றப்பட்டுள்ள காணொலியில் சபாநாயகர் இருக்கையில் எம்.பி. ஆ. ராசா அமர்ந்துள்ளார். அதுவே வைரலாகும் காணொலியில் சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லா அமர்ந்துள்ளார். இதனைக்கொண்டு இக்காணொலி எடிட் செய்யப்பட்டது என்பது தெரிய வருகிறது. மேலும், Sansad TVல் உள்ள முழு நீளக் காணொலியில் எங்கும் பிரதமர் மோடி அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இடம்பெறவில்லை.

Conclusion:

நம் தேடலில் முடிவாக பிரதமர் மோடி அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்பாக எம்‌.பி அமோல் கோல்ஹே ஒன்றிய அரசை விமர்சித்து பேசியதாக வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: BJP workers assaulted in Bihar? No, video is from Telangana

Fact Check: രാഹുല്‍ ഗാന്ധിയുടെ വോട്ട് അധികാര്‍ യാത്രയില്‍ ജനത്തിരക്കെന്നും ആളില്ലെന്നും പ്രചാരണം - ദൃശ്യങ്ങളുടെ സത്യമറിയാം

Fact Check: நடிகர் ரஜினி தவெக மதுரை மாநாடு குறித்து கருத்து தெரிவித்ததாக பரவும் காணொலி? உண்மை என்ன

Fact Check: ಬಾಂಗ್ಲಾದೇಶದಲ್ಲಿ ಕಳ್ಳತನ ಆರೋಪದ ಮೇಲೆ ಮುಸ್ಲಿಂ ಯುವಕರನ್ನು ಥಳಿಸುತ್ತಿರುವ ವೀಡಿಯೊ ಕೋಮು ಕೋನದೊಂದಿಗೆ ವೈರಲ್

Fact Check: రాహుల్ గాంధీ ఓటర్ అధికార యాత్రను వ్యతిరేకిస్తున్న మహిళ? లేదు, ఇది పాత వీడియో