நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக போராட்டக்காரர்களை பாதுகாப்புப்படையினர் தடுக்க முற்பட்டதால் கலவரம் வெடித்தது. அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ராணுவக் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நாட்டின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அழைப்பு விடுத்தனர். தொடர்ச்சியாக, போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ஆலோசனை கூட்டத்தை நடத்தி நேபாளத்தின் இடைக்கால தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கியை தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து, சுசீலா கார்கிக்கு போராட்டக்குழுவினர் அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பை சுசீலா கார்கி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், “நேபாளத்திலும் பாஜக ஆட்சியை கேட்கும் நேபாள இளைஞர்கள். ஊழல் அற்ற ஆட்சி பாஜகவால் தான் கொடுக்க முடியும் என உணர்ச்சி பொங்க பேசும் நேபாள இளைஞர்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) போராட்டக்கார இளைஞர் ஒருவர் பேசக்கூடிய காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் அந்த இளைஞர் பாஜக குறித்து பேசவில்லை என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியில் உள்ள இளைஞர் நேபாளத்தில் பாஜக ஆட்சி வேண்டும் என்று பேசினாரா என்பதை கண்டறிய. அவர் பேசக்கூடியது காணொளியை Clideo என்ற இணையதளத்தில் பதிவேற்றி அவர் பேசக்கூடியதை உரையாக மாற்றினோம்.
அதன்படி, “துரோகிகள் நாட்டிற்கு நெருக்கடியைக் கொண்டு வந்துள்ளனர், பிறகு நம்மைப் போன்ற இளைஞர்கள் பிறக்கிறார்கள். இப்போது நேரம் வந்துவிட்டது, இப்போது நாம் ஒரு புரட்சியைக் கொண்டுவர வேண்டும், போராட்டங்கள் நடத்த வேண்டும், ஆனால், இந்த போராட்டங்களில் யாரும் உயிரை இழக்கக்கூடாது, யாரும் சிரமப்படக்கூடாது, நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் மற்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட வேண்டும்” என்கிறார்.
இதில், எங்கும் அந்த இளைஞர் நேபாளத்தில் பாஜக ஆட்சி வேண்டும் என்று பேசவில்லை என்பது தெரிய வருகிறது. மேலும், நேபாளத்தில் பாஜக ஆட்சி வரவேண்டும் என்று இளைஞர் பேசினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெரியவந்தது.
Conclusion:
முடிவாக, நேபாள இளைஞர்கள் போராட்டத்தின் போது நேபாளத்தில் பாஜகவின் ஆட்சி வேண்டும் என்று கேட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி தவறானது என்றும் அந்த இளைஞர் அவ்வாறு எதையும் கேட்கவில்லை என்றும் நம் ஆய்வில் தெரிய வந்தது.