கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பேருந்துகள் என்ற கேப்ஷனுடன் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிற வரிசைகள் கொண்ட இரண்டு பிரிவுகளாக பேருந்துகளில் இருக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் (Archive) புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில் இருக்கக்கூடிய ஊதா நிற இருக்கைகள் ஆண்களுக்கானது என்றும் இளஞ்சிவப்பு நிற இருக்கைகள் பெண்களுக்கானது என்றும், இவ்வாறாக புதிதாக கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி பரப்பி வருகின்றனர்.
Fact check:
சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் புகைப்படத்தின் உண்மை தன்மையை அறிய முதலில் கேரள மாநிலத்தில் இவ்வாறாக இரண்டு வரிசைகள் கொண்ட ஆண், பெண் என்று பிரிக்கப்பட்ட இருக்கைகள் பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, openmallu.ai என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே புகைப்படத்துடன் காணொலி ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில், “பேருந்தின் புதிய உட்புறப் பகுதி” என்று குறிப்பிடப்பட்டு பின்னர் இக்காணொலி spectoria.ai என்ற AI வீடியோ ஜெனரேட்டர் கொண்டு உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அப்பக்கத்தை ஆய்வு செய்கையில் அதில் AI ஜெனரேட்டரால் உருவாக்கப்பட்ட பல்வேறு காணொலிகள் பதிவிடப்பட்டிருப்பது தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கேரளாவில் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் இரண்டு பிரிவுகளைக் கொண்ட இருக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.