கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் குழந்தைக் கடத்தல் ஆசாமி ஒருவர் பிடிபட்டார் என்ற தகவலுடன் இளைஞர் ஒருவரை கிராம மக்கள் பலரும் சேர்ந்து சரமாரியாக தாக்கும் காணொலி ஒன்று வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இத்தகவல் வதந்தி என்றும் காணொலி வேறு ஒரு சம்பவத்துடன் தொடர்புடையது என்றும் தெரியவந்தது. முதற்கட்டமாக இது தொடர்பாக யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்துவது தொடர்பாக போலி செய்திகள் வலம் வந்த நிலையில் செம்மடமுத்தூர் பகுதியில் குழந்தைகளை கடத்த வந்ததாக வடமாநில இளைஞர்களை அப்பகுதி மக்கள் 50 பேர் சேர்ந்து தாக்கியது தொடர்பான செய்தி ஒன்றை வைரலாகும் காணொலியுடன் நியூஸ்18 தமிழ்நாடு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அதே தேதியில் தினகரன் இணையதளத்தில் கடந்த மார்ச் 7ஆம் தேதி இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “செம்மடமுத்தூரில் வட மாநில இளைஞர்களை தாக்கிய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக வட மாநில இளைஞர்கள் 3 பேரை கிராம மக்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். மூவரைத் தாக்கியதாக 18 பேர் மீது சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வட மாநில இளைஞர்களை தாக்கிய 50 பேரை 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பரவி வரும் செய்தி வதந்தி என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். இதனை சன் நியூஸ் எக்ஸ் தளத்தில் கடந்த மார்ச் 6ஆம் தேதி செய்தியாக வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, கோவையில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது The Hindu கடந்த மார்ச் 14ஆம் தேதி இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளைக் கடத்த அலைவதாக சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள் போலியானவை என்றும், வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கோவையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வைரலாகும் காணொலி உண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வேறொரு சம்பவத்துடன் தொடர்புடையது என்றும் வட மாநில இளைஞர்கள் குழந்தைகளைக் கடத்துவதாக வைரலாகும் தகவல்கள் வதந்தி என்று கோவை மாவட்டக் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.