தாயின் கண் முன்னே தனது மகனை தாக்கிய காவல்துறையினர் 
Tamil

Fact Check: தாயின் கண் முன்னே மகனை தாக்கிய காவல்துறையினர்? இச்சம்பவம் திமுக ஆட்சியில் நடைபெற்றதா

திமுக ஆட்சியில் தாயின் கண் முன்பாகவே தனது மகனை போக்குவரத்து காவல்துறையினர் சரமாரியாக தாக்குவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

Ahamed Ali

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய திருப்பின் அடிப்படையில் மாவட்ட நீதிபதியின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாயின் கண் முன்பாகவே போக்குவரத்து காவலர்கள் சிலர் மகனை மின்கம்பியில் கட்டி வைத்து தாக்கும் காணொலி சமீபத்தில் நடைபெற்றதாக கூறி சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் இச்சம்பவம் 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது நடைபெற்றது தெரியவந்தது. 

இச்சம்பவம் உண்மையில் திமுக ஆட்சியில் நடைபெற்றதுதானா என்பதை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்பிரமணியன் வைரலாகும் அதே காணொலியை 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஹெல்மெட் அணியாததால் 21 வயது பிரகாஷை சென்னை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். வாக்கி டாக்கியால் அவரது தாயாரும் தாக்கப்பட்டார். காவல்துறையினருடன் கைகலப்பு மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பிரகாஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இது சென்னையின் டி நகரில் நடந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி The Hindu வெளியிட்டுள்ள செய்தியின் படி, போக்குவரத்து காவல்துறையினர் டி நகரின் துரைசாமி சுரங்கப்பாதை அருகே ஹெல்மெட் அணியாமலும் மூவர் இருசக்கர வாகனத்தில் பயணித்ததற்காகவும் பிரகாஷை நிறுத்தி விசாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது, ரிசர்வ் சப் இன்ஸ்பெக்டர் (ஆர்.எஸ்.ஐ) ரமேஷுக்கும் பிரகாஷ் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, பிரகாஷ் தனது மொபைல் போனில் நடந்த சம்பவங்களை பதிவு செய்யத் தொடங்கினார்.

இதையொட்டி, காவல் அதிகாரிகளில் ஒருவர் தனது மொபைல் போனில் இச்சம்பவங்களைப் பதிவு செய்ததை தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. தொடர்ந்து, பிரகாஷ் தனது குடும்பத்தினரை போனில் காட்சிப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவலரிடமிருந்து போனைப் பறித்தார். இதனைத் தொடர்ந்து பிரகாஷ் பறித்த போனை மீட்கவே காவல்துறையினர் இவ்வாறு நடந்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2018ஆம் ஆண்டு The Hindu வெளியிட்டுள்ள செய்தி

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், “பிரகாஷ் பணியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியின் சட்டையை  இழுத்ததாகவும், காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும்” கூறினார். மேலும், "நாங்கள் அவரிடமிருந்து மொபைல் போனை மட்டுமே எடுக்க முயற்சித்தோம். அவரது தாயார் அவரைக் காப்பாற்றி விடுவிக்க முயன்றார். காவல்துறையினர் தரப்பில் எந்த அத்துமீறலும் இல்லை. நாங்கள் அந்த இளைஞரையோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களையோ தாக்கவில்லை” என்று கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Deccan Chronicle ஊடகமும் வெளியிட்டுள்ளது. 

மேலும், இச்சம்பவம் நடைபெற்ற 2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றபோது குறிப்பிடத்தக்கது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக திமுக ஆட்சியில் தாயின் கண் முன்னே மகனை காவல்துறையினர் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொலி 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Mumbai people celebrate Indian women’s cricket team's World Cup win? Here are the facts

Fact Check: മീശോയുടെ സമ്മാനമേളയില്‍ ഒരുലക്ഷം രൂപയുടെ സമ്മാനങ്ങള്‍ - പ്രചരിക്കുന്ന ലിങ്ക് വ്യാജം

Fact Check: பீகாரில் பாஜகவின் வெற்றி போராட்டங்களைத் தூண்டுகிறதா? உண்மை என்ன

Fact Check: ಬಿಹಾರ ಚುನಾವಣೆ ನಂತರ ರಾಹುಲ್ ಗಾಂಧಿ ವಿದೇಶಕ್ಕೆ ಹೋಗಿದ್ದರಾ? ವೈರಲ್ ವೀಡಿಯೊ ಹಿಂದಿನ ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: బ్రహ్మపురి ఫారెస్ట్ గెస్ట్ హౌస్‌లో పులి దాడి? కాదు, వీడియో AIతో తయారు చేసినది