fifthestatedigital1
Tamil

Fact Check: ராஜஸ்தான் தார் பாலைவன தேசிய நெடுஞ்சாலை எனப் பரப்பப்படும் காணொலி? உண்மை அறிக

ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

Southcheck Network

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தின் நடுவே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட புதிய நெடுஞ்சாலை என்ற வாசகத்துடன் 15 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. பாலைவனத்தின் குறுக்கே நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள இருவழிப் பாதையில் வாகனங்கள் செல்வதையும், சாலையோரம் சில வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும் அந்தக் காணொலி காட்சிப்படுத்துகிறது.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி சீனாவில் உள்ள நெடுஞ்சாலை என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியை கூர்ந்து கவனித்தபோது, சாலையின் சில இடங்களில் சீன மொழி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், இந்தியாவில் வாகனங்கள் இடதுபுறமாக இயக்கப்படும் நிலையில், இக்காணொலியில் வாகனங்கள் வலதுபுறமாகச் செல்வது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, காணொலியின் முக்கிய காட்சிகளைப் புகைப்படங்களாகப் பிரித்தெடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தினோம்.

முதலாவதாக, ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் இதே காணொலி வெளியிடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதில், கிழக்கு சீனப் பகுதிகளையும் வடமேற்கு சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தையும் இணைக்கும் சுமார் 4,395 கிலோமீட்டர் நீளமுள்ள மாபெரும் விரைவுச் சாலைக் கட்டுமானம் இது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, வைரலாகும் இதே காணொலிக் காட்சி சீனாவின் கோபி பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை எனக் குறிப்பிட்டுப் பகிரப்பட்டுள்ள ஜஸ்வந்த் சிங் என்பவரின் இன்ஸ்டாகிராம் பதிவு மூலமும் இக்காட்சி சீனாவைச் சேர்ந்தது என்பது மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.

மூன்றாவதாக, ராஜஸ்தான் தார் பாலைவனம் எனத் தவறாகக் கூறி பகிரப்பட்ட சமூக வலைதள வைரல் எக்ஸ் பதிவு மற்றும் சீன செய்தி இணையதளங்களில் வெளியான தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்ததில், இது உள்நாட்டு நெடுஞ்சாலை அல்ல என்பதும், வெளிநாட்டுக் காணொலியை வைத்து இந்தியாவில் தவறான தகவல் பரப்பப்படுவதும் நிரூபணமானது.

Conclusion:

சமூக வலைதளங்களில் ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை என்று பரப்பப்படும் காணொலி முற்றிலும் தவறானதாகும். இக்காணொலி சீனாவில் உள்ள சின்ஜியாங் மற்றும் கோபி பாலைவனப் பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்ட காட்சியாகும் என்று நமது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Fact Check: Shivraj Singh Chouhan calls PM Modi and Amit Shah ‘deranged’? No, here are the facts

Fact Check: കൊല്‍ക്കത്തയില്‍ വിമാനത്താവളത്തിനായി മുസ്ലിം പള്ളി പൊളിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: சவுதி பாதுகாப்பு அமைச்சக கட்டடத்தின் மீது ஹூதிக்கள் தாக்குதலா? வைரலாகும் காணொலியின் பின்னணி!

Fact Check: ಧ್ರುವ್ ರಾಠಿ ಅವರ ಲಂಡನ್ ಪ್ರತಿಭಟನೆಯನ್ನು ಪಾಕಿಸ್ತಾನಿ-ಬಾಂಗ್ಲಾದೇಶ ಜನರು ಬೆಂಬಲಿಸುತ್ತಿದ್ದಾರೆಯೇ?

Fact Check: ఆంధ్రప్రదేశ్‌లో స్థానిక సంస్థల ఎన్నికల నామినేషన్ల సమయంలో హింసకు సంబంధించిన వీడియోనా? కాదు, ఇది 2023 నాటిది