கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள ஒரு பள்ளியில் ’A for Adam’, ‘B for Bible’ எனக் கிறிஸ்துவ மதம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாக பாலிமர் ஊடகத்தின் செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறி பரப்பி வருகின்றனர்.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் 2019ஆம் ஆண்டு வெளியான செய்தி என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் வைரலாகும் தகவல் தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தது. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடப்பட்ட அச்செய்தியை "கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் ஆங்கிலப்பள்ளியில் குறிப்பிட்ட மதத்தின் அடையாளங்களை பதியவைக்கும் முயற்சியாக எ ஃபார் ஆதாம், பி ஃபார் பைபிள் என்று அச்சிடப்பட்ட புத்தகம் கொடுக்கப்பட்டிருப்பது சர்ச்சை எழுப்பியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில், பாலிமர் செய்தியிலேயே, இது பற்றி அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசியதாக ஆடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. அதில், தங்கள் பள்ளியில் அரசின் பாடத் திட்டம்தான் பின்பற்றப்படுவதாகவும், இது மாணவர்களுக்கு வழங்கப்படும் பள்ளி டைரியில் அச்சிட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு அப்பக்கங்கள் நீக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவற்றிலிருந்து இது 2019ம் ஆண்டு தனியார் பள்ளியில் கொடுக்கப்பட்ட டைரியில் இருந்தது என்பதும், அன்றைய காலகட்டத்திலேயே இது தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில் நீக்கப்பட்டுவிட்டதாகவும் பள்ளி சார்பில் அப்போதே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தற்போது நடந்தது போல் பழைய செய்தியை தவறாகப் பரப்புகின்றனர். மேலும், 2019ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் பள்ளி பாடத்திட்டத்தில் கிறிஸ்தவ மத குறியீடு இடம்பெற்றுள்ளதாக வைரலாகும் தகவல் 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய செய்தி என்று தெரியவந்தது.