
“காந்தார தேசம்" என்றழைக்கபடும் ஆப்கானிஸ்தானில் உள்ள "Asamai” என்ற மலைத்தொடரில் உள்ள சிவன் கோயிலின் இன்றைய நிலை. இக்கோயில் மற்றும் அதற்கு அருகே உள்ள குளம் இன்றும் உள்ளது, ஆனால் இங்கே வழி பாடு இல்லை. முஸ்லிம் தேசம் ஆகி விட்டதால் அவர்கள் இதை கண்டு கொள்வதில்லை என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் இருப்பது ஆப்கானிஸ்தானில் உள்ள அசாமாய் என்ற மலைத்தொடரில் இருக்கக்கூடிய சிவன் கோயில் என்று கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது மராட்டிய மாநிலத்தில் உள்ள ஹரிஷ் சந்திரேஷ்வர் கோயில் என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவல் குறித்த உண்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2022ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி Nav Bharat Times ஆப்கானிஸ்தானில் உள்ள அசாமாய் கோயில் தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ளது துர்கா தேவி கோயில். தலைநகரான காபூலில் உள்ள அசா மலையில் அமைந்துள்ளது. கோயில் இருப்பதால் இம்மலை அசாமாய் என்ற பெயர் பெற்றறதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆப்கானிஸ்தானின் காபுலில் துர்கா தேவிக்கு அசாமாய் என்ற மலைத்தொடரில் கோயில் இருப்பது தெரிய வருகிறது.
தொடர்ந்து, வைரலாகவும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, அதே புகைப்படத்தை P. Elango Velur Thiruturaipoondi என்ற ஃபேஸ்புக் பயனர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பதிவிட்டுள்ளார். அதில், “இது ஹரிஷ் சந்திரேஷ்வர் கோயில், மராட்டிய மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹரிஷ்சந்திரகாட் கோட்டைக்குள் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, மராட்டிய மாநில சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி இக்கோயில் ஹரிஷ்சந்திரகாட் கோட்டையில் அமைந்துள்ளது என்றும் ஹேமத்பந்தி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இக்கோயில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக கூகுள் மேப்பிள் கோயிலை ஜியோ லொக்கேட் செய்து பார்த்தபோது, இரு அமைப்புகளும் ஒத்துப்போவது தெரியவந்தது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் ஆப்கானிஸ்தானில் அசாமாய் மலைத்தொடரில் அமைந்துள்ள சிவன் கோயில் என்று வைரலாகும் புகைப்படம் உண்மையில் மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ள ஹரிஷ் சந்திரேஷ்வர் கோயில் என்றும் ஆப்கானிஸ்தானில் அசாமாய் மலைத்தொடரில் துர்கா தேவிக்கென்று கோயில் இருப்பதும் தெரியவந்தது.