“தஞ்சை பெரிய கோயில் கட்டுமானப் பணிகளுக்காக சோழ தேச வீரர்கள் கற்களை சுமந்து சென்ற போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்!” என்ற கேப்ஷனுடன் பலர் சதுர வடிவிலான பெரிய கற்களை சுமந்து செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டியவர்கள் கற்களை சுமந்து செல்வதாக இப்புகைப்படம் பகிரப்படுகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இப்புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. முதலில் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி egyptian_civilization என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வைரலாகும் புகைப்படத்துடன் சேர்த்து இரண்டு புகைப்படங்களை பதிவிட்டிருந்தது. அதில், “பிரமிட் எவ்வாறு கட்டப்பட்டது என்று AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், historyperplex என்ற இன்ஸ்டாகிராம் பக்கமும் இதே தகவலுடன் கடந்த மே 8ஆம் தேதி வைரலாகும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. இப்புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தானா என்பதை கண்டறிய Hive Moderation இணையதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றி ஆய்வு செய்ததில், இது 97 விழுக்காடு AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று உறுதியானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கி.பி.1003ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு கட்டுமானம் நிறைவு செய்யப் பெற்றது தஞ்சை பெரிய கோயில் அக்காலகட்டத்தில் கேமரா கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தஞ்சை பெரிய கோயில் கட்டுமானப் பணிகளுக்காக சோழ தேச வீரர்கள் கற்களை சுமந்து சென்ற போது எடுக்கப்பட்டது என்று வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.