“பாஜக கட்சியில் பெண்களை கேவலமாக நடத்தும் காட்டுமிராண்டி கும்பல் எனத் தெரிந்தும் தமிழக பாஜக பெண்கள் கூச்சநாச்சம் இல்லாம கும்மி அடிக்குதுங்களே இதுங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா பிஜேபி பாலியல் சுரண்டல் கும்பல்” என்ற கேப்ஷனுடன் சமூக செயல்பாட்டாளர் சுந்தரவல்லி தனது எக்ஸ் பக்கத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பேரணியின் போது பெண் ஒருவரை ஆண் ஒருவர் தவறாக தொடுவது போன்று காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இது பாகிஸ்தானில் பேரணியின் போது நடைபெற்ற சம்பவம் என்று தெரியவந்தது. முதலில் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “ஷெர்ரி ரஹ்மான் மற்றும் யூசுப் கிலானி ஸ்கேன்டல்” என்ற தலைப்பில் Daily motion-ல் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காணொலி ஒன்று பதிவிடப்பட்டிருந்தது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் பலவும் இக்காணொலியை பதிவிட்டு இருந்தன. அதில், “2007ல் நடைபெற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி பேரணியின் போது ஷெர்ரி ரஹ்மான் மற்றும் யூசுப் கிலானி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து, இதில் இருப்பவர்கள் யார் என்று உறுதிபடுத்த வைரலாகும் காணொலியில் இருக்கும் நபர்களுடைய புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்தோம்.
ஒப்பீட்டின் மூலம் அதில் இருக்கும் பெண் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் என்பதும் அப்பெண்ணைத் தொடும் நபர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் செயத் யூசுப் கிலானி என்பதும் தெரியவந்தது. மேலும், இது குறித்து மீண்டும் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு Dainik Bhaskar செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “பேரணியின் போது செயத் யூசுப் கிலானி, ஷெர்ரி ரஹ்மானை தவறாக தொட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது”.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சமூக செயல்பாட்டாளர் சுந்தரவல்லி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காணொலி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பேரணியின் போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.