தி.மு.கவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையைத் தொடர்ந்து, சில நடிகைகளுக்குப் பணம் வழங்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. சில குறிப்பிட்ட நடிகைகளின் பெயர்கள் பரப்பப்பட்ட நிலையில், அவர்கள் அந்த வதந்திகளுக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், அந்த இரண்டு நடிகைகளுடன் கே.என்.நேரு மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படம் பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின்ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டது என்று தெரியவந்தது.
சமூக ஊடகங்களில் பரவும் இந்தப் புகைப்படம் செயற்கையான தோற்றத்தைக் கொண்டிருந்ததால், சவுத்செக் குழு இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய புகைப்படத்தை முழுமையாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முதல் சான்றாக, கூகுள் லென்ஸ் தளத்தில் இந்தப் புகைப்படத்தைப் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.
அதன் மூலம் உண்மையான புகைப்படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடிந்தது. இரண்டாவது சான்றாக, நடிகை ஜனனி அசோக்குமார் வெளியிட்ட அந்த அசல் இன்ஸ்டாகிராம் பதிவை எடுத்து வைரலாகும் படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தோம். அந்த அசல் புகைப்படத்தில் இருந்த நபர்களின் முகங்களை அகற்றிவிட்டு, நடுவில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இருப்பது போன்று வேண்டுமென்றே எடிட் செய்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
மூன்றாவது சான்றாக, இந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்டதா என்பதை உறுதிசெய்ய ஏஐ படங்களைக் கண்டறியும் இணையதளத்தில் இதைப் பதிவேற்றிப் பரிசோதித்தோம். அந்த ஆய்வில் 99% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது மற்றும் போலியானது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
Conclusion:
தி.மு.க மூத்த தலைவர் கே.என்.நேரு நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படம் AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட ஒரு போலிப் புகைப்படம் என்பதை சவுத்செக் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளது.