திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்த திமுக பெண் நிர்வாகி என்று வைரலாகும் காணொலி 
Tamil

Fact Check: எம்.பி சீட் கிடைக்காத திமுக பெண் நிர்வாகி? மு.க. ஸ்டாலினை விமர்சித்து காணொலி வெளியிட்டாரா?

தனக்கு எம்.பி சீட் மறுக்கப்பட்டதால் திமுக மாணவர் அணி துணைச் செயலாளர் பூரண சங்கீதா, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து காணொலி வெளியிட்டதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

“சிவகங்கை எம்பி சீட்டு இல்லைன்னு எதுவும் சொல்லிட்டானுங்களா?! இந்தம்மா பேச்சு கழக ஓனர தாக்குறது மாதிரியே இருக்கு…” என்ற கேப்ஷனுடன் திமுக மாணவர் அணி துணைச் செயலாளர் பூரண சங்கீதா பேசும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேசும் அவர் “எங்கிருந்தோ தமிழ்நாட்டிற்கு பஞ்சம் பிழைக்க வந்த நீங்க, தமிழ்நாட்டு மக்கள் போட்ட பிச்சையில் வாழும் நீங்க, கேவலம் பணத்திற்காகவும், பதவிக்காகவும் மரம் விட்டு மரம் தாவுவது போல் ஒவ்வொரு கட்சியாக தாவி கேவலமான பிழைப்பு பிழைக்கும் நீங்க, தவறாக பேசுவதற்கு என்ன தகுதி உள்ளது” என்று கூறியுள்ளார்.

இவர் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்திருந்தார். திமுகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக எம்.பி வேட்பாளர்களுக்கான பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அவருக்கு சிவகங்கை தொகுதிக்கான சீட் மறுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து இவ்வாறு காணொலி வெளியிட்டுள்ளார் என்று பரப்பி வருகின்றனர்.

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் காணொலி எடிட் செய்யப்பட்டு தவறாக பரப்பப்படுவது தெரியவந்தது. இக்காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த மார்ச் 12ஆம் தேதி பூரண சங்கீதா தனது எக்ஸ் தளத்தில் “அரசியல் பச்சோந்தி @khushsundar-க்கு என் வன்மையான கண்டனங்கள். ஏழை எளிய சாமானிய பெண்களை கொச்சைப்படுத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. அது எங்கள் "உரிமை" தொகை !” என்ற கேப்ஷனுடன் பாஜக தேசிய மகளிர் அணி உறுப்பினர் குஷ்புவிற்கு கண்டனம் தெரிவித்து காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

காணொலியில் பேசியுள்ள பூரண சங்கீதா, “மிஸிஸ் அரசியல் பச்சோந்தி குஷ்பு அவர்களே, எங்கிருந்தோ தமிழ்நாட்டிற்கு பஞ்சம் பிழைக்க வந்த நீங்க,  தமிழ்நாட்டு மக்கள் போட்ட பிச்சையில் வாழும் நீங்க, கேவலம் பணத்திற்காகவும், பதவிக்காகவும் மரம் விட்டு மரம் தாவுவது போல் ஒவ்வொரு கட்சியாக தாவி கேவலமான பிழைப்பு பிழைக்கும் நீங்க, தமிழ்நாட்டு மகளிருக்கான மகளிர் உரிமைத் தொகை பற்றி தவறாக பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் “மகளிர் உரிமைத் தொகை” என்று அழகான பெயர் வைத்துள்ளார்கள்.

இந்த மகத்தான திட்டத்தினால் தமிழ்நாடு மகளிர் அனைவரும் உரிமையுடன், கண்ணியத்துடன், சுயமரியாதையுடன் பயனடைந்து வருகின்றனர். இப்படிப்பட்ட மகத்தான இத்திட்டத்தினை கூட இவ்வளவு கேவலமாக இழிவாக பிச்சை காசு என்று கூறி உள்ளீர்களே, இதிலிருந்தே தெரிய வேண்டாமா குஷ்பு நீங்களும், நீங்கள் சார்ந்து இருக்கக்கூடிய கட்சியான பாஜகவும் எவ்வளவு தரம் தாழ்ந்தது என்று” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து கடந்த மார்ச் 11ஆம் தேதி சர்ச்சைக்குறிய வகையில் பேட்டியளித்திருந்த குஷ்பு, “தாய்மார்களுக்கு ரூ. 1000 கொடுத்தால், பிச்சை போட்டால் அவங்க திமுகவுக்கு வாக்களிச்சிருவாங்களா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக பூரண சங்கீதா இவ்வாறாக எக்ஸ் தளத்தில் காணொலியை பதிவிட்டுள்ளார். பூரண சங்கீதா பேசிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து “குஷ்பு” என்ற வார்த்தையை மட்டும் எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக பூரண சங்கீதாவிற்கு சிவகங்கை தொகுதிக்கான எம்பி சீட் மறுக்கப்பட்டதால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து காணொலி வெளியிட்டதாக வைரலாகும் காணொலி தவறானது என்றும் உண்மையில் குஷ்புவிற்கு கண்டனம் தெரிவித்து வெளியிடப்பட்ட காணொலியை எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Pro-Palestine march in Kerala? No, video shows protest against toll booth

Fact Check: ഓണം ബംപറടിച്ച സ്ത്രീയുടെ ചിത്രം? സത്യമറിയാം

Fact Check: யோகி ஆதித்யநாத்தை ஆதரித்து தீப்பந்தத்துடன் பேரணி நடத்தினரா பொதுமக்கள்? உண்மை என்ன

Fact Check: Christian church vandalised in India? No, video is from Pakistan

Fact Check: ಕಾಂತಾರ ಚಾಪ್ಟರ್ 1 ಸಿನಿಮಾ ನೋಡಿ ರಶ್ಮಿಕಾ ರಿಯಾಕ್ಷನ್ ಎಂದು 2022ರ ವೀಡಿಯೊ ವೈರಲ್