“பாபர் மசூதி இருந்த நிலத்தில் ராமர் கோவில் கட்டப்படவேண்டும் என்பதே புரட்சித் தலைவி அம்மா அவர்களின் விருப்பமாக இருந்தது. அதைக் காண அவர் இன்று நம்மிடையே இல்லை என்கிற வருத்தம் எனக்குண்டு” என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக ஜனவரி 11ஆம் தேதியிட்ட ABP Naduவின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முதலில் ABP Naduவின் சமூக வலைதளப்பக்கங்களில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்று தேடியதில் அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது. மேலும், ஜனவரி 11ஆம் தேதி, “அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் எனக்கு வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்வேன். எனக்கு கால் வலி உள்ளதால் சிறிது சிரமமாக உள்ளது; அதை பொருத்தே முடிவு செய்யப்படும்” என்று பழனிச்சாமி கூறியதாகவே செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், வைரலாகும் நியூஸ்கார்டில் இருப்பது போன்று பேசினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அவ்வாறு அவர் பேசியதாக எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இறுதியாக, வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து ABP Nadu தரப்பில் கேட்டபோது, “அவ்வாறாக நியூஸ்கார்டை ABP Nadu வெளியிடவில்லை என்றும் அது போலி" என்றும் விளக்கமளித்தனர்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பதே ஜெயலலிதாவின் விருப்பமாக இருந்தது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக வைரலாகும் ABP Naduவின் நியூஸ்கார்ட் போலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.