எரிபொருள் இன்றி ஜுவாலமுகி கோயிலில் எரியும் நெருப்பு 
Tamil

Fact Check: ஜுவாலமுகி கோயிலில் எரிபொருள் இன்றி பல ஆண்டுகளாக எரியும் நெருப்பு? அதிசயமா அல்லது அறிவியலா!

எரிபொருள் இன்றி இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஜுவாலமுகி கோயிலில் பல ஆண்டுகளாக எரியும் நெருப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Ahamed Ali

இமாச்சலப்பிரதேசத்தின் கங்ரா மாவட்டத்தில் உள்ளது ஜுவாலமுகி கோயில். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஒன்பது தீபங்கள் நெருப்பு எரிவதற்கான எண்ணெய்யோ எரிபொருளோ இன்றி பல நூறு ஆண்டுகளாக இந்த தீபங்கள் எரிந்து வருவதாக கூறி சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. நெருப்பு எரிவதற்கான காரணத்தை நாசா விஞ்ஞானிகளாலேயே இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறி பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் நெருப்பு எரிவதற்கான காரணம் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது. 

இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Ancient Origins என்ற இணையதளம் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி கட்டுரை வெளியிட்டிருந்தது. அதன்படி, “காங்ரா பள்ளத்தாக்குக்கு மத்தியில் அமைந்துள்ள ஜுவாலமுகி கோவிலில் பூமியில் இருந்து வெளிப்படும் நெருப்புச்சுடர், நிலத்தடியில் காணப்படும் இயற்கை எரிவாயு படிவுகளால் தூண்டப்படுகிறது. இந்த கவர்ச்சிகரமான புவியியல் நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் ஒரு நெருப்பைக் கொடுத்து இயற்கை முரண்பாடுகளை மீறி, அறிவியல் ஆர்வத்தின் காட்சியாக மாறுகிறது.

இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள பொறிமுறையானது பூமியின் மேற்பரப்பிற்கு இயற்கை வாயுவை வெளியிடுவதாகும், முக்கியமாக இது எரியக்கூடிய மீத்தேன் வாயுவைக் கொண்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாக இது ஒரு அறிவியல் நிகழ்வு என்பது தெரிய வருகிறது.

தொடர்ந்து தேடுகையில், National Geographic ஊடகம் இதுதொடர்பாக கடந்த நவம்பர் 27ஆம் தேதி விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “நியூயார்க்கில், ஒரு நீர்வீழ்ச்சிக்கு பின்னால் ஒரு சிறிய நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. இது ஒரு இயற்கை நிகழ்வு, தொடர்ந்து எரியும் இந்த தீப்பிழம்புகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. ஆழமான நிலத்தடி நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேறும் வாயுவால், இவை சில ஆயிரம் ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கின்றன.

இத்தாலியின் ரோமில் உள்ள தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலைக் கழகத்தின் புவியியலாளர் கியூசெப் எட்டியோப் கூறுகையில், "நித்திய தீப்பிழம்புகள் (Eternal Flames) வாயுக்கசிவின் ஒரு சிறப்பு நிகழ்வாக கருதப்படுகின்றது. நிலத்தடியில் உள்ள இயற்கையான எரியக்கூடிய வாயு-பெரும்பாலும் மீத்தேன், ஈத்தேன் மற்றும் புரொப்பேன்-அழுத்தப்பட்ட நீர்த்தேக்கங்களிலிருந்து பாறையில் உள்ள விரிசல்கள் அல்லது துளைகள் மூலம் மேற்பரப்புக்கு பயணிக்கும் போது இவ்வாயுக்கசிவு ஏற்படுகிறது.

சிறப்பு நிலைகளில், மேற்பரப்பை அடையும் வாயு போதுமான அளவு மீத்தேன் செறிவைக் கொண்டிருக்கும்போது, அது "தன்னிச்சையாக எரியக்கூடும்" என்று எடியோப் கூறுகிறார். தொடர்ச்சியான வாயு வெளியேற்றத்தால் எரிபொருளாக, சில தீப்பிழம்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எரியும். "இதன்காரணமாகவே, நித்திய சுடர் என்ற சொல் வந்தது" என்கிறார்.

National Geographic வெளியிட்டுள்ள செய்தி

இந்த அரிய நெருப்புக்கள் - உலகளவில் "அநேகமாக 50க்கும் குறைவாக" இருப்பதாக எடியோப் மதிப்பிடுகிறார் - இவை பொதுவாக பெட்ரோலிய வயல்களுக்கு அருகில் காணப்படுகிறது. அமெரிக்கா, ருமேனியா, இத்தாலி, துருக்கி, ஈராக், அஜர்பைஜான், தைவான், சீனா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இவை காணப்படுகின்றன. இவற்றில் சில “ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான அல்லது ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே எரிய ஆரம்பித்து இருக்கலாம்” என்று எடியோப் கூறுகிறார்.

நியூயார்க்கின் எட்டர்னல் பிளேம் அருவி, நரகத்தின் கதவு என்று அழைக்கப்படும் துர்க்மெனிஸ்தானில் அமைந்துள்ள தர்வாசா பள்ளம், அஜர்பைஜானில் உள்ள யானர் டாக், துருக்கியின் சிமேரா மலையில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு என்று உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஜுவாலமுகி கோயிலில் எரியும் நெருப்பை போன்ற அதே நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சிமேரா மலையில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு

Conclusion:

நம் தேடலின் முடிவாக எரிபொருள் இன்றி இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஜுவாலமுகி கோயிலில் எரியும் நெருப்பு என்றும் அது எரிவதற்கான காரணம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றெல்லாம் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் இவை எரிவதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Pro-Palestine march in Kerala? No, video shows protest against toll booth

Fact Check: ഓണം ബംപറടിച്ച സ്ത്രീയുടെ ചിത്രം? സത്യമറിയാം

Fact Check: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்தாரா விஜய்?

Fact Check: Christian church vandalised in India? No, video is from Pakistan

Fact Check: ಕಾಂತಾರ ಚಾಪ್ಟರ್ 1 ಸಿನಿಮಾ ನೋಡಿ ರಶ್ಮಿಕಾ ರಿಯಾಕ್ಷನ್ ಎಂದು 2022ರ ವೀಡಿಯೊ ವೈರಲ್