உபி சம்பல் நகரில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது 
Tamil

Fact Check: உபி மாநிலம் சம்பல் நகரில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி கொண்டாடப்பட்டதா?

46 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தின் சம்பல் நகரில் ஹோலி கொண்டாடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

Ahamed Ali

நாடு முழுவதும்கடந்த 13 மற்றும் 14ஆம் தேதிகளில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக வட மாநிலங்களில் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் 46 வருடங்கள் கழித்து ஹோலி கொண்டாடப்பட்டதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. மேலும், “இதை சாதித்துக் காட்ட ஒரு மோடி, ஒரு யோகி, சம்பல் எஸ்.பி என பலர் தேவைப்பட்டுள்ளனர்” என்றும் அக்காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் சம்பல் நகரில் உள்ள ககு சராயில் உள்ள கார்த்திகேய மகாதேவ் கோவிலில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி கொண்டாடப்பட்டது தெரிய வந்தது. 

வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Hindustan Times இதுதொடர்பாக கடந்த மார்ச் 13ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 46 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ககு சராய் பகுதியில் உள்ள கார்த்திகேய மகாதேவ் கோவிலில் பக்தர்கள் ஹோலி கொண்டாடினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாஸ்ம சங்கர் கோவில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் 1978ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து மூடப்பட்டது. இந்நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி  திறக்கப்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Times of India வெளியிட்டுள்ள செய்தி

இதுதொடர்பாக Times of India வெளியிட்டுள்ள செய்தியின் படி, இக்கோயில் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகில் ஷாஹி ஜமா மஸ்ஜித் அமைந்துள்ளது. 2024ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி, நீதிமன்ற உத்தரவுப்படி மசூதியில் நடத்தப்பட்ட சர்வேயின் போது வன்முறை ஏற்பட்டது. இதன் விளைவாக நான்கு பேர் உயிரிழந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில், ஹோலி கொண்டாட்டம் குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் ஆனந்த் அகர்வால் கூறுகையில், “46 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகேய மகாதேவ் கோவிலில் ஹோலி கொண்டாடும் பாக்கியம் கிடைத்துள்ளது. பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் இங்கு குவிந்து பூக்கள் மற்றும் வண்ணங்களை வைத்து கொண்டாடினர்” என்றார். இதில் பங்கேற்ற பிரியன்ஷு ஜெயின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பாராட்டி கூறுகையில், ‘‘பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் சிறப்பாக ஈடுபட்டதால், அனைவரும் பண்டிகை உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்” என்றார்.

இதே செய்தியை News 18 ஊடகமும் வெளியிட்டுள்ளது. மேலும், இக்கோயிலில் உற்சாகமாக ஹோலி கொண்டாடும் காணொலியை கடந்த மார்ச் 13ஆம் தேதி Times Now ஊடகம் விரிவாக வெளியிட்டுள்ளது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் உத்திரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் 46 ஆண்டுகள் கழித்து ஹோலி கொண்டாடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அப்பகுதியில் உள்ள கார்த்திகேய மகாதேவ் கோயிலில் தான் 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி கொண்டாடப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Potholes on Kerala road caught on camera? No, viral image is old

Fact Check: ഇത് റഷ്യയിലുണ്ടായ സുനാമി ദൃശ്യങ്ങളോ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: ஏவுகணை ஏவக்கூடிய ட்ரோன் தயாரித்துள்ள இந்தியா? வைரல் காணொலியின் உண்மை பின்னணி

Fact Check: ರಷ್ಯಾದಲ್ಲಿ ಸುನಾಮಿ ಅಬ್ಬರಕ್ಕೆ ದಡಕ್ಕೆ ಬಂದು ಬಿದ್ದ ಬಿಳಿ ಡಾಲ್ಫಿನ್? ಇಲ್ಲ, ವಿಡಿಯೋ 2023 ರದ್ದು

Fact Check: హైదరాబాద్‌లో ఇంట్లోకి చొరబడి పూజారిపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి